அரைக்கிலோ எடையுடன் பிறந்த அதிசய குழந்தை! 6 மாதத்தில் நிகழ்ந்த அற்புதம்! நெகிழ்ந்த பெற்றோர்!

குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை தற்போது நலமாக இருக்கும் சம்பவமானது சென்னையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் வசித்து வரும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த மே மாதத்தில் குறைபிரசவத்தில் 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. 38 வயதான இவருக்கு 22 வாரங்களிலேயே 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்தது. 

மற்றொரு குழந்தை 510 கிராம் எடையுடன் உயிருக்கு போராடி வந்தது‌. சில நாட்களிலேயே குழந்தையின் எடையானது 380 கிராமாக குறைந்தது. இதனால் குழந்தை மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தது. 

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு மருத்துவர்கள் இன்குபேட்டரில் சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மிகவும் போராடி கொடுத்து வந்தனர். அடுத்த 100 நாட்களில் குழந்தை 1.54 கிலோ எடை கூடியது. குழந்தை நல்ல நிலையை அடைந்ததால் மருத்துவர்கள் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தனர். மேலும் தற்போது குழந்தை 3.5 கிலோ எடையுடன் மிகவும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், "குழந்தை பிறந்தவுடன் அதன் எடை அளவு குறைந்து கொண்டே சென்றது. இதனால் குழந்தையின் நுரையீரல் போன்றவை பலவீனமாக இருந்தது. குழந்தையின் தோல் வழுவழுப்பாக இருந்தது.

குழந்தையைக் காப்பாற்றுவது கடினம் என்று தெரிந்தும் முழு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தோம்.இன்குபேட்டரில் குழந்தையை வைத்து அதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுத்து வந்தோம்.

அடுத்த 100 நாட்களில் குழந்தை 1.54 எடை கூடியது. குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்தோம். தற்போது குழந்தை 3.5 கிலோ எடையுடன் சாதாரண குழந்தைகளை போன்று விளையாடி வருகிறது. குழந்தையின் பார்வை மற்றும் கேட்கும் திறன் சரியாக இருக்கிறது" என்று பேட்டி அளித்தனர்.

தங்கள் குழந்தையை போராடி காப்பாற்றிய மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.