உயிருக்கு போராடும் கேன்சர் நோயாளி! ஒரே நொடியில் ரூ.20 லட்சம்! ஜெகன் மோகனை கொண்டாடும் ஆந்திரா!

முதல் முறையாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் கல்லூரி மாணவர் ஒருவருக்கு செய்த நிதியுதவி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில் ஏகோபித்த வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற சில நாட்களிலேயே அவர் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். குறிப்பாக மாணவர்களுக்கு சனிக்கிழமை அன்று பள்ளிகளில் முழுவதும் விளையாட அனுமதித்துள்ளார்.

மேலும் விரைவில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் நேற்று சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு வருகை தந்தார். இல்லத்திற்கு திரும்புவதற்காக அவர் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் சிலர் விமான நிலையத்தின் அருகில் பலகைகளை வைத்துக்கொண்டு கோஷமிட்டு கொண்டிருந்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டி  உடனே தன் காரை நிறுத்திவிட்டு அவர்களிடம் பேசினார்.அங்கிருந்த மாணவர்கள் அவரிடம் உரையாடினர். அப்போது அவர்கள், எங்களுக்கு நீரஜ் என்ற நண்பர் ஒருவர் உள்ளார். அவர் ஒரு வருடமாக புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் அவரை ஹைதராபாதில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவர்கள் சிகிச்சைக்காக 20 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று கூறினர். ஆதலால் நாங்கள் ஆறு நாட்களாக சாலையோரத்தில் பயணித்து எங்களால் முடிந்த தொகையை பொதுமக்களிடம் இருந்து பெற்று வருகிறோம்.

அரசு ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். உடனே ஜெகன்மோகன் ரெட்டி அந்த மாவட்டத்தின் ஆட்சியரை வரவழைத்து நீரஜ்க்கு தேவையான மருத்துவ உதவியை மேற்கொள்ளுமாறு கூறினார். மேலும் ஆந்திர பிரதேசம் அரசின் சார்பாக 20,00,000 ரூபாய் அளிப்பதாக உத்தரவாதம் அளித்தார்.

இதனைக் கேட்ட சக மாணவர்கள் மனமகிழ்ந்தனர். தங்கள் நண்பரை காப்பாற்றி விட முடியும் என்று கூறி துள்ளி குதித்தனர். பதவியேற்ற சில நாட்களிலேயே ஆந்திர பிரதேச மக்களிடம் நன்மதிப்பை ஜெகன்மோகன் ரெட்டி பெற்று வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது