காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளையொட்டி முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து புகழஞ்சலி செலுத்தினார்கள்!

செயற்குழு கூட்டத்திற்குப் பின்பு முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து எந்த விழாவிலும் பங்கேற்கவே இல்லை. இருவருக்கும் பூசல் என்று நிலவிவந்த யூகங்களை உடைப்பது போன்று இன்று இருவரும் இணைந்து காந்திஜி பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டனர்.


மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து காந்தியின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் 

மகாத்மா காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , ‘அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்தவர் மகாத்மா காந்தி. அவரது பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்கி மகிழ்கிறேன்.

தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்குகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

அதேபோன்று துணை முதல்வருடைய ட்விட்டர் பதிவில், ’அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவர் காந்தி. கல்விக்கண் திறந்த கர்மவீரர், பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் காமராஜர்’ என்று புகழஞ்சலி செய்திருக்கிறார்.