மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்
கலை,பண்பாட்டுத் துறை சார்பில் கலைஞர்களுக்கு தனி இணையத்தளம் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்
மேலும், கலை பண்பாட்டுத் துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணைய தளத்தில் கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலை துவக்கி வைத்து, தொல்லியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 அறிக்கையினையும் வெளியிட்டார்கள்.
2018-19ஆம் ஆண்டிற்கான கலை பண்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், மதுரை, பசுமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களின் கல்வி நலன் மற்றும் இடவசதியினை கருத்தில் கொண்டு மதுரை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்கு கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், பசுமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கு 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 வகுப்பறைகள், கல்லூரி முதல்வர் அறை, அலுவலக அறை மற்றும் இசைக்கருவிகள் வைப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மையக் கட்டடம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
மேலும், கலை பண்பாட்டுத் துறையின்www.artandculture.tn.gov.in என்ற இணைய தளத்தில் கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள். இந்த இணைய தளம், கலை பண்பாட்டுத் துறை சார்ந்த விவரங்களை அளிப்பதோடு, நிகழ்த்துக் கலைகள் சார்ந்த கலைஞர்களின் குழுவாகவும், கவின்கலைகள் சார்ந்த தனிக் கலைஞர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த கலைஞர்களின் விவரங்கள், தேவைப்படும் அரசு துறைகளுக்கும், கலை நிறுவனங்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கும் வகையில் இத்தளத்தில் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைய வாயிலில், நிகழ்த்துக் கலைகளில் மரபு மற்றும் கிராமியம் என்ற இரு பிரிவுகளில், குரலிசை, இசைக்கருவிகள், நடனம், நாடகம் ஆகிய துணைப் பிரிவுகளில் ஒவ்வொரு உட்பிரிவும் அளிக்கப்பட்டு, அதில் கலைக்குழுக்கள் தங்களின் குழுவினை சார்ந்த அனைத்து கலைஞர்களின் முகவரி, தொடர்பு எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன் பதிவு செய்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கலைக்குழுவின் புகைப்படத்தையும், குழுவின் நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் இருந்தால் அதன் இணைய இணைப்பு முகவரியையும் இதில் இணைத்துக் கொள்ளலாம். கலைக்குழுக்களுக்கு வாய்ப்பளிப்போர் மாவட்ட மற்றும் வட்ட வாரியாகவோ அல்லது கலைப்பிரிவு வாரியாகவோ தேர்வு செய்து விவரங்களை காணலாம். அதேபோன்று, கவின் கலைகளில் ஓவியம், சிற்பம், கைவினை ஆகிய பிரிவுகளில் உள்ள உட்பிரிவு வாரியாக தனிக்கலைஞர்கள் இந்த இணைய வாயிலில் பதிவு செய்துக் கொள்ளலாம். கவின் கலைஞர்கள் குறித்து விவரம் வேண்டுவோர், மாவட்ட மற்றும் வட்ட வாரியாகவோ அல்லது கலைப்பிரிவு வாரியாகவோ தேர்வு செய்து விவரங்களை காணலாம்.
கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நடத்தப்படும் மாவட்ட, மாநில, வெளிமாநில மற்றும் அயல் நாட்டு நிகழ்ச்சிகளுக்கும், மண்டல, மாநில அளவிலான நடத்தும் ஓவிய, சிற்பக் கண்காட்சி போன்றவற்றிற்கும் இக்கலைக்குழுக்கள் மற்றும் தனிப்பட்ட கலைஞர்களின் பதிவு வாயிலாக வாய்ப்புகள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2019-2020ஆம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம் - கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் - கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகளையும், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிய கற்கால இடங்களைக் கண்டறிதல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரங்களில் தொல்லியல் சார் இடங்களைக் கண்டறியும் தொல்லியல் கள ஆய்வுகள் ஆகிய பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேற்படி அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து 31.7.2020 வரையிலான பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் இதுவரையிலான முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்கள், நிழற்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி நூல் வடிவத்தில் தொல்லியல் துறையால் தயாரிக்கப்பட்ட , தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 என்ற அறிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்டார்கள். இந்த அறிக்கையானது, தொல்லியல் துறையின் மூலம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்த விவரங்களை தொல்லியல் ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.