பெருந்தலைவர் காமராஜருக்கு முதல்வர் எடப்பாடியார் புகழாரம்..! நாடார்கள் வாக்குகளை அள்ளிட்டாரய்யா....

நாடார் சமூகத்தினருக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, நாடார் இன மக்களுக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். இதையடுத்து, நாடார்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்பது உறுதியாகியிருக்கிறது.


இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெருந்தலைவர் காமராஜருக்கு புகழாரம் சூட்டினார். ‘‘பொன் நாடார், பொருள் நாடார், தன் அன்னையையும் நாடார், நாடொன்றே நாடி தன் நலம் என்றும் நாடாத நாடாரை நாடினேன் என்று கவியரசு கண்ணதாசன் போற்றி புகழ் பாடிய நம் பெருந்தலைவர் காமராஜரை நான் மனதார வணங்குகிறேன். 

எடுத்துக் கொள்ளும் எந்த முயற்சியிலும் உறுதியோடு நின்று இடையறாத உழைப்பின் மூலம். இன்று பல உச்சங்களை தொட்டு தங்களுக்கென்று ஒரு வங்கியை உருவாக்கி நடத்துகிற அளவுக்கு முன்னேறிய சமூகமாக நாடார் சமூகம் திகழ்வதற்கு அவர்களின் விடா முயற்சியும், உழைப்பும், சுய மரியாதையும்தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் வென்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) வழங்க வேண்டும் என்று நான் சிவநாடாரை கேட்டுக்கொண்டேன். தாராள மனப்பான்மையுடன் ஒரே நேரத்தில் 35 கோடி ரூபாயை வாரி வழங்கிய திரு.சிவ நாடார் அவர்களுக்கு 

நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகக் கொடுமையான ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளான நாடார் சமூகப் பிரிவுகளும் உண்டு. ஆனால், இன்று உலகமே வியக்கும் வண்ணம் முழு நாடார் சமூகமும் கல்வியாலும், கடின உழைப்பாலும் பெருமளவு முன்னேறி இருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. பனையிலிருந்து கல்கண்டு, வெல்லம் போன்ற பொருட்கள் தயாரிக்கிறார்கள்.

எங்கள் பகுதியில் இத்தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, இதன் மகத்துவம் எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல கருத்தைச் சொல்லியிருக்கின்றார். ஏற்கனவே அது அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பனை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அரசு பரிசீலிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதுமட்டுமல்ல, எடப்பாடியிலேயே அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் ஒன்றியத் தலைவராக இருக்கின்றார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்பொழுதெல்லாம் பதவியில் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் அவர் சேர்மேனாக இருப்பார். இப்பொழுது இடஒதுக்கீட்டில் அவர் மனைவி சேர்மேனாக இருக்கின்றார். நான் எப்பொழுது கழகத்தில், இந்த இயக்கத்தில் சேர்ந்து பொறுப்பிற்கு வந்தோமோ அப்போதிலிருந்து அவர் என்கூடவே இருக்கிறார்.

 இன்னும் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். இவைகளில் என்னவெல்லாம் எங்களால் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் எங்களுடைய அரசு நிச்சயமாக செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சமூகக் கூட்டமாக இருந்தாலும், விரைவாக தேர்தல் வரவிருக்கின்றது. அந்தத் தேர்தலிலும் எங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்ள, ஒட்டுமொத்த குரலில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.