முதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நேரமடா...

ஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழாவுக்காக பிரதமர் மோடியை சந்திப்பதற்கான அரசு முறை பயணம் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் போனாலும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரும் பயணமாகவே கருதப்படுகிறது.


அ.தி.மு.க வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கணக்கு போட்டிருந்தன. ஆனால் அந்த கட்சிகளின் முகங்களில் கரியைப் பூசும் விதமாக, பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை ஏற்றுக்கொண்டன.

இது எடப்பாடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும் நிலையில், அவரது இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து திமுக முகாம் ஆடிப் போயிருக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் அதிகரித்த எடப்பாடியின் ஆளுமை, தமிழக மக்களிடையே அவரது செல்வாக்கை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதி உதவி தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசும் அவர், தமிழக அரசியல் சூழ்நிலை, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் விவாதித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால்தான், நேரடியாக அக்கட்சித் தலைமையுடனேயே பேசி விடுவது என்ற முடிவில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். வழக்கம்போல் இதையும் வெற்றிகரமாக சாதித்துவிட்டு வருவார் எடப்பாடி என்று அதிமுகவினர் உற்சாகமாக பேசிக் கொள்கிறார்கள்.

கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துவிட்டால், அதன்பிறகு அ.தி.மு.க.வின் ஸ்பீடு அமோகம்தான்.