மீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி வீர சபதம்

முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தைத் திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி, மீண்டும் ஆட்சியமைப்போம் என்று சூளுரை செய்திருக்கிறார்.


ராணுவ கட்டுக்கோப்போடு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி, பெண்குலத்திற்கே பெருமை சேர்த்தவர், இரும்பு மங்கை என்று பெயர் பெற்றவர், எதிரிகளாலும் தைரியசாலி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு வென்று காட்டி பெருமைப்படுத்தியவர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதலமைச்சர் என்ற சாதனையைப் படைத்து பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் உலகளவில் பாராட்டைப் பெற்றன. அதை பலர் தங்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினர். பெண் சிசுக்களைக் காக்க தொட்டில் குழந்தைகள் திட்டம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் போன்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த 

அம்மா உணவகம், ஏழை மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, அரிசி, மடிக்கணினி, மிதிவண்டி, கல்வி உபகரணங்கள், சீருடை, தாய்-சேய் பெட்டகம் என பல திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் வாழ்வில் ஏற்றம் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். சாதாரண மக்களும் வசதி படைத்த மக்களுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொண்டு வந்தவர்.

மழை நீர் சேகரிப்பு என்ற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் நீர்வளம் பெருக அடித்தளமிட்டவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். சுனாமி, மழை வெள்ளமென்று இயற்கைப் பேரிடர்களின்போது அரசு இயந்திரம் முழு ஆற்றலுடன் இயங்க முன்மாதிரியாக இருந்தவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இத்தகைய மாபெரும் மக்கள் தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் தன்னலமில்லா வாழ்விற்கு பொருத்தமாக மெரினா கடற்கரையில் இந்த மிகப் பெரிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான நினைவு மண்டபம் அமைக்க உலகளாவிய கட்டடக் கலை நிபுணர்களிடமிருந்து வரைபடங்களைப் பெற்று,

எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர் குழு மூலம் வரைபடங்களைத் தேர்வு செய்து குறித்த காலத்திற்குள் இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தில், ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவுச் சின்னத்துடன் அருங்காட்சியும், அறிவுத் திறன் பூங்கா, கரிங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்த்தடங்கள் மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்துடன் இன்று காட்சியளிக்கின்றது. இத்தனை சிறப்பும், இன்னும் எண்ணற்ற சிறப்பும் கொண்ட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நேரில் கண்டு அவர்களிமிருந்து அரசியலையும், ஆட்சிக் கலைகளையும் கற்றுக் கொள்ள நமக்கெல்லாம் கிடைத்த வாய்ப்பு மகத்தானது.

அந்த வாய்ப்பு இறைவன் நமக்கு அளித்த கொடை என்றே எண்ணலாம். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருமை, பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிடவும், இங்கே அழகான நினைவிடத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அமைத்திருக்கின்றோம். இந்த நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அப்பணித்திருக்கின்றேன்.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடமும் புதுப்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவராலும் அன்போடு அம்மா என்று அழைக்கப்படுபவர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான். அந்த அளவிற்கு ஆழமான அன்பை அனைத்துத்தரப்பு மக்களிடமும் பெற்றவர் நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஒருவர்தான். 

மாண்புமிகு அம்மா அவர்களை நல்லடக்கம் செய்த இந்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின். அவருடைய தந்தை கருணாநிதி இறந்தபோது, இதே பகுதியில் அடக்கம் செய்யப்படுகின்ற நிலையில், மாண்புமிகு அம்மா அவர்களை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவகம் கட்டுவதை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளை இரவோடு இரவாக நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றவர் இதே திமுக தலைவர் ஸ்டாலின் தான்.

இதிலிருந்து, எந்த அளவுக்கு அம்மா அவர்களுக்கு நினைவிடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.ஸ்டாலின் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இவர்களது பினாமிகள் வழக்குகளை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஸ்டாலின் அவர்களின் கபட நாடகத்தை உலகமே அறிந்துள்ளது, இவரது சாயம் வெளுத்துள்ளது. இத்தகைய தீய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின்.  

மாண்புமிகு அம்மா அவர்கள் சட்டமன்றத்தில், நூறாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியும் ஆட்சியும் தொடரும் என்றும், எவராலும் அழிக்க முடியாது எஃகு கோட்டையாகத் திகழும் என்றும் சூளுரைத்தார். அவருடைய சூளுரையை ஏற்று, வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சி அமைப்போம், அதுதான் நம்முடைய லட்சியம்,

அதுதான் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக்கடன் என்பதை ஒவ்வொரு தொண்டனும் உணர வேண்டும், இரவு, பகல் பாராமல் பாடுபட வேண்டும். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மீண்டும் அம்மா அவர்கள் சொல்லிய இலட்சிய வார்த்தைகளுக்கிணங்க, அம்மாவுடைய ஆட்சியை அமைத்து, அம்மாவுடைய இதே நினைவு மண்டபத்தில் நாம் அனைவரும் நன்றி செலுத்துவதற்கு வீர சபதம் ஏற்போம் என்று பேசியிருக்கிறார். .