முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானார்..!

ஏதேனும் ஒரு காரணத்தைக் கொண்டு அவ்வப்போது சேலத்துக்கு முதல்வர் வந்துசெல்கிறார் என்றால், அதற்கு காரணம் தாய்ப் பாசம் மட்டும்தான். முதல்வரின் சேலம் விசிட்டை பலரும் குறை சொன்னாலும், அவர்களை கண்டுகொள்வதே இல்லை.


ஆம், தாயைப் பார்க்கச் செல்வதைவிட வேறு எதுவும் முதல்வருக்கு முக்கியம் இல்லை. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள். இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தில் வசித்தார். இவர் கணவர் கருப்ப கவுண்டர் ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தவசாயி உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி) இரவு 11 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. 

இதைத் தொடர்ந்து முதல்வரின் தென் மாவட்டச் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவே அவசரமாக புறப்பட்டு சேலம் சென்றார். தாயின் உடலைப் பார்த்து அதிர்ந்துநின்ற எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் ஆறுதல் சொன்னார்கள்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமம் அவருடைய சொந்த ஊர் ஆகும். தவசாயிக்கு 2 மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் கோவிந்தராஜ், இளைய மகன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவார். 

நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் தவசாயி அம்மாள் என்று கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது பொருத்தமான ஆறுதல்.