முதல்வர் எடப்பாடி செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை திருச்சியில் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்!

இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை திருச்சியில் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.


இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தைக்கு நுண் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி குறைபாடு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு பலவீனமடைவதுடன் ரத்த சோகை போன்ற நோய் ஆபத்துகளும் ஏற்படும்.

எனவே, தமிழகத்தில் நுண் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரிசி மாவில் பொடிகளாக மாற்றப்பட்ட வைட்டமின், இரும்பு சத்து, துத்தநாக சத்து, போலிக் அமிலத்தைக் கலந்து ஈரப்பதத்து டன் கூடிய கலவை உருவாக்கப் படும். அந்தக் கலவை இயந்திரம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும். இப்படி, செறிவூட்டப்பட்ட அரிசியில் வைட்டமின் ஏ, வைட்ட மின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து ஆகிய 9 நுண் ஊட்டச்சத்துகள் இருக்கும்.

இப்படி, சத்துணவில் செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் மூலம் வழங்கும் திட்டத்தையே அரசு இன்று தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்று இல்லாத நிலை ஏற்படும் என்பது உறுதி.