தென்காசி முத்து விவகாரத்தில் உடனடி விசாரணை மட்டுமின்றி, நிவாரணமும் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி!

இன்னொரு சாத்தான்குளம் விவகாரம் என்று தென்காசி வட்டத்தைச் சேர்ந்த முத்து விவகாரம் பேசப்பட்டு வந்த நிலையில், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டது மட்டுமின்றி, நிவாரணமும் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இன்று அவர் கொடுத்திருக்கும் அறிக்கை இது. தென்காசி மாவட்டம் மற்றும் தென்காசி வட்டம், ரவண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து என்பவர் அவருடைய நிலத்தைச் சுற்றி உரிய அனுமதி பெறாமல் மின்வேலியை அமைத்துள்ளார் எனவும், அதனால் கடையம் வனத்துறையினர் கடந்த 22.7.2020 அன்று இரவு இதனை கண்டுபிடித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், மின்இணைப்பை துண்டித்துவிட்டு, அணைக்கரைமுத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் எனவும்,

விசாரணையின் போது அணைக்கரைமுத்து அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக ஆரம்ப சுகாதாரநிலையதிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற  செய்தியை அறிந்து நான் மிகுந்த  வேதனை  அடைந்தேன்.

இச்சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தலைமைகுற்றவியல் நடுவர் அவர்களால் சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதித்துறைநடுவர் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைஇத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த அணைக்கரைமுத்துவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது குடும்பசூழ்நிலையை கருத்தில்கொண்டு, அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய்வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அன்னாரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.