தினகரனுக்கு பீதி கிளப்பும் எடப்பாடி! இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்களுடன் ரகசிய பேரம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை 40 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் என்ன ஆனாலும் பரவாயில்லை, சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்.


தி.மு.க.வுடன் நேரடியாக மோதுவது சரிதான், ஆனால் தினகரன் பிரிக்கும் வாக்குகள்தான் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் உண்டாக்கும் என்பதால், அதனை எப்படி சரிக்கட்டுவது என்று யோசித்து, அதற்கான வழிமுறையை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது தினகரன் நியமித்திருக்கும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களிடம் மணியான அமைச்சர்களை பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார் இப்போது தினகரன் வெளியிட்டிருக்கும் பட்டியலில் இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட பணம் படைத்தவர்கள் என்பதால், அடுத்த பட்டியலுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறது எடப்பாடியின் அமைச்சரவை.

இப்போதைய பட்டியலில் இருப்பவர்களுக்கு எப்படி இடைஞ்சல் கொடுக்கலாம், எப்படி மடக்கலாம் என்றும்  யோசித்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்தபிறகு, அந்த வேட்பாளர் தாய் கழகத்துக்குத் திரும்பி வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கேட்பது கொடுக்கப்படுமாம்.

தங்கத்தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி போன்றவர்களிடம் இப்போது பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. தகவல் தெரிந்து கொதித்துப்போய் இருக்கிறார் தினகரன். நல்ல வாய்ப்பு வரும்போது அ.ம.மு.க. வேட்பாளர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றே தெரிகிறது.