எதிர்க் கட்சிகளுக்கு பார்வைக் கோளாறா.. மனதில் கோளாறா.? தி.மு.க. மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசத் தாக்கு.

கொரோனா காலத்திலும் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இன்று மதுரை மாநகரில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர், ’அம்மாவின் அரசால் நிறைவேற்றப்படும் இத்தனைத் திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை. இந்தத் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, 

இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சொல்கிறார். அவர் வெளியில் வந்து பார்த்தால்தானே இங்கே நடைபெறுகிற பணிகள் தெரியும். அறையின் உள்ளே அமர்ந்து பார்த்தால் அறைதான் கண்ணுக்குத் தெரியும். எனவே, அறையிலிருந்து வெளியில் வந்து பாருங்கள், மதுரை மாநகரத்தில் நான் அறிவித்த பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை சொல்லி, எப்பொழுதும் எங்கள் மீது பழி சுமத்துவதுதான் இவர்களுடைய வாடிக்கை. 

இவர்கள் என்ன செய்வோம் என்று இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் செய்ததையும் பாராட்ட மனம் கிடையாது. ஒரு அரசாங்கம் அமைப்பது என்றால், அந்த அரசாங்கத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேறுகிறது என்பதை நாங்கள் புள்ளிவிவரங்களோடு கூறுகிறோம்.  

தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, ஏற்கனவே பல கூட்டுக் குடிநீர் திட்டங்களை நான் திறந்து வைத்திருக்கின்றேன். அம்மாவின் அரசைப் பொறுத்தவரை, குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டு எங்கு குடிநீர் பிரச்சனை இருந்தாலும், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, கிராமப்புற மக்களுக்கும் குழாயின் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். 

 எங்கள் அரசைப் பொறுத்தவரை, இரவு, பகல் பாராமல் எங்களுடைய அமைச்சர் பெருமக்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செயலாக்கத்திற்குக் காரணம் மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் அவர்கள். அவர் நிதி அமைச்சராக இருக்கின்றார். எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதற்கேற்றவாறு நிதியை உருவாக்கி எங்களுக்கு வழங்கிக் கொண்டேயிருக்கின்றார் என்று பாராட்டிப் பேசினார்.