மக்கள் நலனுக்காக தி.மு.க. குரல் கொடுத்துள்ளதா..? கேள்வி எழுப்பும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளுக்கு தேர்தலுக்காகத்தான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா என்று கேட்கப்பட்டது.


அதற்கு முதல்வர் பழனிசாமி, ‘விவசாயிகள், :-விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம், 16.43 லட்சம் விவசாயிகள் வேளாண் கடன் தள்ளுபடியால் பயன்பெற்றனர். இதேபோல, ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.விவசாயிகள் மற்றும் மகளிரின் கோரிக்கை ஏற்று தற்போது, தங்க நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எந்ததெந்த காலகட்டத்தில் மக்களுக்கு என்ன உதவிகள் தேவையோ, அதனை சரியாக செய்து வருகிறோம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், மக்களுடன் மக்களாக இருந்து வந்ததால், எந்த நேரத்தில் மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பது தெரியும்.

இந்தியாவில் எந்த மாநிலமும் ரொக்கத்தை கையில் வைத்து எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது. செயல்படுத்தவும் முடியாது. கடன் வாங்காத மாநிலங்களே கிடையாது. கடன் வாங்கிதான் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் பயன்படுத்துகிறோம். மக்களுக்கு புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய கடன் வாங்க வேண்டியுள்ளது. வளர்ச்சி திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதில் தவறு இல்லை. திமுக ஆட்சியிலும் கடன் பெற்றே திட்டங்களை நிறைவேற்றினர்.

மக்கள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் திமுகவினர் குரல் கொடுத்திருக்கிறார்களா..? வேளாண் கடன் தள்ளுபடி என்பதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த திமுக முயற்சி செய்கிறது. வேளாண் கடன் தள்ளுபடிக்காக திமுக என்றாவது குரல் கொடுத்துள்ளதா..? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.