புயல் நிவாரணத்தில் போர்க்கால நடவடிக்கைகள். விவசாயிகளுக்கும், உயிர் இழந்தோர் குடும்பத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி.

புரெவி புயல் காரணமாக மிக கனமழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, புயல் நிவாரணப் பணிகள் போர்க்கால நடவடிக்கையில் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


புரெவி’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் 36,986 எண்ணிக்கையிலான நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சூடான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 

 மேலும், குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெயும் வழங்க நான் உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  

‘புரெவி’ புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  

மேலும், இப்புயல் மற்றும் கன மழை காரணமாக 37 பசு மாடுகள், 4 எருதுமாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கவும், இது மட்டுமின்றி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தரவும் எடப்பாடியார் உத்தரவிட்டுள்ளார்.