வருகிறது புயல்… மின்னல் வேகத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், டிசம்பர் 3ம் தேதி காலை குமரிக்கடல் பகுதிக்கு வரும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக மின்னல் வேகத்தில் பணிகளை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.


1.12.2020 முதல் 4.12.2020 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் மற்றும் இதர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டது.

• வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 1.12.2020 அன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜே.சி.பி. மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். 

• தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும்.  

• தென் தமிழக கடற்கரையோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள், கன்னியாகுமரி (2), திருநெல்வேலி (3), தூத்துக்குடி (2) மற்றும் மதுரை (2) மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.  

• நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் இருக்க அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அவ்விடங்களில் கண்காணிக்க காவல்துறை / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். மேலும், தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்புகொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.  

• பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு விரைந்து அழைத்துச் செல்ல வேண்டும். 

• நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், சமையல் எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்குத் தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

• கொரோனா மற்றும் இதர தொற்று ஏற்படா வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள் (Sanitizers), முகக்கவசங்கள் ஆகியவற்றை அளவு இருப்பு வைக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.  

• வங்ககடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

• தற்போது, ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீன்பிடி படகுகளின் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்குமாறு, தொடர்புடைய மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

• பொது மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.  

• அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.  

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.