முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பது உறுதி என தெரிவித்திருக்கிறார்!

சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிமு.பழனிசாமி, ‘அனைவருக்கும் தங்குதடையின்றி கல்வி கிடைப்பது உறுதி’ என்று கூறியிருக்கிறார்


அவர் பேசுகையில், ‘சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இஸ்ரோ நிறுவனத்துடன் இணைந்து துணைக்கோள் ஒன்றினை விண்ணில் செலுத்திய செயல், இந்தப் பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

 “அறிவுசார் மனிதவளம் மேம்பாடு வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கு தடையின்றி கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். எனவே, மாண்புமிகு அம்மா அவர்களைத் தொடர்ந்து, மாண்புமிகு அம்மாவின் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். 

உயர்கல்வித் துறையில் மாண்புமிகு அம்மா அவர்களாலும், மாண்புமிகு அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. 2011-12ஆம் ஆண்டிலிருந்து 2019-20ஆம் ஆண்டு வரை அதிகளவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை அம்மாவின் அரசு உருவாக்கித் தந்துள்ளது. 

சென்ற 2011-12ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் உயர்கல்வி கற்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமீபத்தில் தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உயர் கல்வி தரவரிசைப் பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்களும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சார்ந்த 18 பொறியியல் கல்லூரிகளும், முதல் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 32 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம் பெற்று rhjid படைத்துள்ளன என்பதை பெருமிதத்துடன் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக, இன்று உயர் கல்வியில் சேரும் மாணாக்கர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்துள்ளது, இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   

சுயமாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பட்டம் பெற்று வெளியில் வருபவர்கள், சுயதொழில் தொடங்குவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

எழுந்து நடந்தால், இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால், சிலந்தி வலையும் நம்மை சிறைப் பிடிக்கும் என்பதை பட்டம் பெற்று, புதிய உலகத்தில் அடியெடுத்து வைக்கும் நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொண்டார்.