முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் புதிய தொழில் அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அறித்தார்.


கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நேரத்தில் தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேபோல, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் அவர்களுக்கு துணையாக நின்று இந்த நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவி வருகிறார்கள். இந்தப் பணிகளில் ஈடுபட்ட பல அரசு அலுவலர்கள் தன்னலம் பாராமல், அர்ப்பணிப்பு உணர்வோடு, சேவை மனப்பான்மையோடு, உயர்ந்த எண்ணத்தோடு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட காரணத்தினால் எதிர்பாரதவிதமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தயார்நிலையில் உள்ளனர். மருத்துவமனைகள் மூலம் போதிய படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நோய்த் தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன.

நடமாடும் மருத்துவக் குழுக்கள் நேரில் சென்று பரிசோதனை செய்து, நோய் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நாள்தோறும் 65 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 74,640 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 119 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய நியமிக்கப்பட்ட அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டவர்களைக் கண்டறிந்து, உடனடியாக பரிசோதனைக்குட்படுத்தி தொற்று இருப்பின் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலமாக 2019-20ஆம் ஆண்டில் 10,014 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித் தொகை வேண்டுமென்று முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலமாகவும் மற்றும் பொதுமக்கள் தானாக முன்வந்தும் அளித்த மனுக்களின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித் தொகை இந்த மாவட்டத்தில் அதிகமான அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கின்றன.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட 25,861 மனுக்களில் தகுதியான 13,178 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. இதில் முதியோர் உதவித் தொகை பெற்றவர்கள் 3,377 நபர்கள்.  

2016-17ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,33,316 விவசாயிகளுக்கு ரூபாய் 161.21 கோடி நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்திருந்த 5,65,392 விவசாயிகளில், இதுவரை, 3,64,523 விவசாயிகளுக்கு சுமார் 64 சதவிகித இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,100 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் புதிய தொழில் தொடங்க வேண்டுமென்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். கொரோனா காலத்திலும், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூபாய் 31,000 கோடி தொழில் முதலீட்டை இந்த 5 மாதங்களில் நாம் ஈர்த்திருக்கின்றோம். இந்தியாவிலேயே, கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு தான்.  

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் தொழில்தான் பிரதானத் தொழிலாக இருக்கிறது. வேறு எந்தத் தொழிலும் பிரதானமாக இல்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அவரது கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை கொண்டு ஒரு புதிய தொழில் இந்த மாவட்டத்தில் துவங்குவதற்கு அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.