சென்னையில் தீயாய் பரவும் கொரோனா! 4மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு இடமில்லை! அடுத்தது என்ன?

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் அனைத்தும் தீர்ந்ததால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டாலின் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை என நான்கு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரத்திற்கு முன்பு வரை இந்த மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இருந்தது.

ஆனால் கடந்த வாரம் முதல் சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டனர். இவர்கள் அனுமதிக்க நான்கு மருத்துவமனைகளிலும் இடவசதி இல்லை என்று தகவல் வெளியானது. அதோடு மட்டும் அல்லாமல் கொரோனா நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ்கள் காக்க வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, வேலம்மாள் கல்லூரி உள்ளிட்ட 10 கல்லூரிகளில் இனி கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.