தவளை ஜூஸ் - எலி சட்னி! சென்னை கல்லூரி கேன்டீனில் அதிர்ச்சி மெனு

சென்னை செம்மஞ்சேரி அருகில் தான் அந்த தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.


அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித் தனி விடுதிகள் உள்ளன. ஆனால் தவளை நீந்தும் குடிதண்ணீரும், எலி மிதக்கும் சட்னியும் பாரபட்சமின்றி தாராளமாக வழங்கப்படுகின்றன. அவற்றை மாணவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். அவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

 

உணவு விடுதியின் குடிநீர் தொட்டியின் ஃபில்டர் அமைப்பில் இருந்து சிறிய தவளைகள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகக் கூறுகின்றனர் மாணவர்கள். கல்லூரிக் கட்டணமாகவும், விடுதிக் கட்டணமாகவும் ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் நலன் மீது காட்டும் அக்கறையின்மை வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது

 

கடந்த செமஸ்டரின் போதே புகார் அளித்த நிலையில் அதன் பிறகு விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்குச் சென்ற போதும் அதே நிலை தொடர்ந்ததையடுத்து மாணவர்கள் ஆத்திரமுற்றனர். 

 

கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து விடுதி மாணவர்கள்  மட்டுமன்றி மற்ற மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கல்லூரி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீர்வு காணப்படாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது