தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா..! சென்னையில் மட்டும் 52 பேருக்கு நோய் தாக்குதல்..! கட்டுக்கடங்காமல் பரவுகிறதா?

சென்னையில் நாள் தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 52 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எஞ்சிய 20 பேர் மட்டுமே மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சென்னையில் கடந்த 3 நாட்களாகவே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இன்று கொரோனா உறுதியாகியுள்ள 52 பேரில் 42 பேருக்கு மட்டுமே ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எஞ்சிய 10பேருக்கு கொரோனா எப்படி வந்தது என்றே தெரியவில்லை. இந்த பத்து பேரும் டெல்லி செல்லவில்லை, வெளிநாடும் செல்லவில்லை. கொரோனா பாதித்தவர்களுடனும் இவர்களுக்கு தொடர்பு இல்லை. இதனால் இந்த பத்து பேருக்கும் கொரோனா எப்படி தொற்றியது என்று ஆய்வு நடைபெற்று வருகிறது.

சென்னையில் நேற்று முதல் வாகனப்போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் கொரோனா அதிகம் இருக்கும் பகுதிகளில் மக்கள் வீட்டைவிட்டே வெளியே வரமுடியாதது போல் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையும் கூட மூடப்பட்டுவிட்டது.

இந்த அளவிற்கு நடவடிக்கை தீவிரமாக காரணம் சென்னையில் கொரோனா வேகமெடுத்துள்ளது தான் என்கிறார்கள். இதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.