நியுஸ் J சேனல் விவகாரம்! விஷாலை கைது செய்ய போலீஸ் தீவிரம்!

நியுஸ் J செய்தி சேனல் துவங்க அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எங்கிருந்து காசு வருகிறது என்று கேட்ட விவகாரத்தால் நடிகர் விஷாலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருப்பவர் விஷால். இவருக்கு அரசியல் ஆசையும் உண்டு. அதனால் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் விஷாலால் போட்டியிட முடியவில்லை. இருந்தாலும் விஷாலுக்கு அரசியல் ஆசை விடவில்லை.

   இதனால் அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துகளை விஷால் கூறி வருகிறார். அண்மையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் நியுஸ் J எனும் செய்தி தொலைக்காட்சியை துவக்கினர். அது குறித்து விஷால் தனதுட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது ஒரு செய்தி சேனல் தொடங்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் பணம் தேவை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

   ஆனால் தற்போது எம்.பிக்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்த சேனல் தொடங்க உள்ளதாக அறிகிறேன். அவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று விஷால் ட்விட்டரில் கேள்வி கேட்டார். இதனை தொடர்ந்து மறுநாள் முதல் நியுஸ் J தொலைக்காட்சியில் விஷாலுக்கு எதிரான செய்திகள் வரிசை கட்டின. மேலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷாலுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டன.

   இந்த நிலையில் தான் சென்னையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்று இருக்கும்இரண்டு அலுவலகங்களையும் அந்த சங்கத்தில் உள்ளவர்கள் பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர். இதற்காக தயாரிப்பாளர்களை அங்கு அழைத்துச் சென்றவர் யார் என்றால் சக்சேனா. இவர் தான் அமைச்சர்கள் மூன்று பேரால் தொடங்கப்பட்டுள்ள நியுஸ் J தொலைக்காட்சியின் சி.இஓ.

   மேலும் சக்சேனா தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். விஷாலுக்கு எதிரான தயாரிப்பாளரை ஒன்று திரட்டிய சக்சேனா தன்னுடன் முதலில் இருந்தே விஷாலை எதிர்த்து வரும் ஜே.கே.ரித்தீஷ், அண்மைக்காலமாக விஷாலை எதிர்க்கும் ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சென்றார்.

   அங்கு போலீசார் முன்னிலையிலேயே தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அலுவலகத்திற்கு பூட்டும் போடப்பட்டது. அதாவத விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் நிதி முறைகேடு செய்துள்ளதாக கூறி சக்சேனா இதனை செய்து முடித்துள்ளார். அமைச்சர்கள் மூன்று பேர் விவகாரம் என்பதால் அங்கிருந்த போலீசார் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.

   தயாரிப்பாளர் சங்க அலுவலகம் பூட்டப்பட்ட நிலையில் விஷால் இனி என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே தயாரிப்பாளர் சங்க நிதி ஏழு கோடி ரூபாயை விஷால் முறைகேடு செய்துவிட்டதாக சக்சேனா தரப்பினர் கொளுத்திப் போட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புகார் அளிக்கப்படும் பட்சத்தில் விஷாலை ஊழல் வழக்கில் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

   முன்பெல்லாம் இது போன்ற பிரச்சனைகள் வரும் போது மேல்மட்டத்தில் தனக்கு உள்ள தொடர்புகள் மூலம் விஷால் சமாளித்து வந்தார். ஆனால் தற்போது அமைச்சர்கள் மூன்று பேர் சக்சேனா மூலமாக விஷாலை குறி வைத்துள்ளதால் விஷாலுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இதனால் தான் தயாரிப்பாளர் சங்கம் மூடப்பட்டும் விஷால் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.