மாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? உங்களுடைய குணங்கள் எப்படி இருக்குமென தெரிந்துகொள்ள ஆசையா?

சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும்போது மாசி மாதமென்று அழைக்கின்றோம். இந்த ராசியானது சனிக்கு ஆட்சி வீடும், சூரியனுக்குப் பகைவீடும் ஆகும்.


பஞ்ச தத்துவங்களில் காற்றைக் குறிக்கும் ராசியாகும். ஜாதகப் பலன்களை அறிய விதி, மதி, கதி என்ற மூன்று ஸ்தானங்களை பார்ப்பார்கள். விதி என்றால் நாம் பிறந்த லக்கனம், மதி என்றால் நாம் பிறந்த ராசி, கதி என்றால் சூரியன் இருக்கும் ராசி ஆகும்.

குணபாவங்கள் : இவர்களுக்கு விருப்பு வெறுப்புகள் உண்டு. உறவினர்களிடத்திலும், நண்பர்கள் ஒரு சிலரிடத்தில்தான் இவர் நெருங்கிப் பழகுவர். இவருடைய அன்புக்கு பாத்திரமானவர்கள் எதை செய்தாலும், எதைச் சொன்னாலும் தாங்கிக் கொள்வர்.

மற்றவர்களின் மனதை படிக்கக்கூடிய திறன் மிக்கவர்கள். சூழ்நிலைக்கேற்ப நடந்து வெற்றி காண்பார்கள். விரக்தி மனோபாவமும், தியாக உணர்ச்சியும் இவருடைய இயற்கை சுபாவங்களாகும்.

புரட்சிகரமான செயல்களுக்கும், தீர்மானங்களுக்கும் இவர் ஆதாரமாக விளங்கக்கூடியவர்கள். உயர்ந்த அந்தஸ்து, சேவை, தலைமை பொறுப்பு வகிக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் புறக்கணித்து வெளியேறுவர்.

இவருடைய திட்டங்களுக்கும், செய்கைகளுக்கும் தடை விதிக்க எவராலும் இயலாது. மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாத செயல்களை சாதுர்யமாக சாதித்துக் காட்டுவார்கள்.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். இவர்கள் மனவுறுதி உள்ளவர்கள். ஆதலால் மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இருக்கும்.

இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். குறிக்கோளுடன் செயல்படுவதில் வல்லவர்கள். சிலசமயம் மனதில் சில சந்தேக எண்ணங்கள், சஞ்சலங்கள் தோன்றினாலும் அதிலிருந்து விடுபட்டு தைரியமாக காரியம் சாதிப்பதில் கண்ணாக இருப்பார்கள்.

எந்த வேளையில் செய்தால் பலன்கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள். கற்றறிந்தவற்றை மனதில் பதிய வைத்துத் தக்க தருணத்தில் பயன்படுத்தி கருத்துடன் பொருள் சேர்ப்பதில் வல்லவர்கள்.

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களை நேசிப்பார்கள்.

இவர்களுக்கு பெரிய பதவிகள், தலைமைப் பொறுப்புகள் தானாக வந்தடையும். சுக்கிரன் இவர்களுக்கு யோகமாக அமைந்துவிட்டால் லட்சுமி யோகம் உண்டு. புதனும், செவ்வாயும் சாதகமாக இருக்க பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சுகபோக பாக்கியங்கள் கிடைக்கும்.

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடம் புத்திசாலித்தனமும், ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கி வந்தால் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும்.

உணர்ச்சி வேகமுடையவர். இருப்பினும் மகிழ்ச்சிகரமாகக் காரியத்தைச் சாதிப்பர். பிடிக்காதவர்களை வெறுப்பதுடன் அவருடைய வாடை படாமல் ஒதுக்கிடுவர். எந்தச் செய்கையில் ஈடுபடுவதாயினும் லாபக் கண்ணோட்டத்துடன் விளங்குவர். ஆதாயமில்லாமல் எந்தக் காரியத்திலும் பிரவேசிக்கமாட்டார்.

பிறர் நலனுக்காகப் பாடுபடும் தருணத்தில் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்திடுவர். பயந்த சுபாவமுடையவராயினும் வெளிப்புறத் தோற்றத்திற்கு வீரியவாதியாக விளங்குவர். மற்றவர்களைத் தம்வசப்படுத்துவதில் சாமர்த்தியம் உடையவர். சுயநலவாதிகள், நேர்மையற்றவர்களைக் கண்டிக்கும் விவகாரங்களில் இவர் விட்டுக் கொடுப்பவரல்லர்.