கோபமும் முரட்டுத்தனமும் குணமாக இருக்கிறதா? நீங்கள் இந்த ராசியா என்று செக் செய்துகொள்ளுங்கள்!

ராசி மண்டலத்தில் சிம்மம் 5வது ராசியாகும்.


இந்த ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியாக வருவதால் இந்த ராசியை நெருப்பு ராசி என்று அழைப்படுகிறது. அதிகக் கோபமுடைய முரட்டு சுபாவம் உடைய ராசி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ராசியில் மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ஆவர். இந்த ராசியில் சூரியன் மட்டும் ஆட்சியாகவும் சந்திரன், செவ்வாய், புதன், குரு, ஆகிய கிரகங்கள் நட்பாகவும் சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் பகை பெற்றும் ஆட்சி செலுத்துகின்றன.

நட்பு ராசிக்காரர்கள்: மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன. சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இயல்பாகவே அதிகாரம் செய்து ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் உடையவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் உள்ள குணத்தை உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும், துடிப்புடனும் செயல்படுவார்கள்.

நல்ல பறந்த உள்ளம் உடையவர்கள். எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவர்கள். எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்படுவதில் ஆர்வம் உள்ளவர்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் பிறரால் அதிகமாகப் காயப்படுத்தப்படுவார்கள். அவர்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் அதிகமாக ஏங்குவார்கள். ஆனால் அதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் எதிலும் உயர்ந்ததையே எதிர்பார்ப்பார்கள்.

தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து நடந்து அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இயல்புடையவர்கள். அதிகம் பேசுவதைத் தவிர்த்து ஒரு காரியத்தைச் செயலாற்றுவதில் எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பார்கள். பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள்.

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை உடனே மேற்கொண்டு அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு பாடுபடுவார்கள். ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது சங்கம் இவற்றில் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பைப் பெறுவர். பொய் பேசுபவர்களையும் தர்மத்திற்கு எதிராகப் பேசுபவர்களையும் எதிர்த்து பெரிய அளவில் குரல் கொடுப்பார்கள். எப்பொழுதும் தலைமை ஏற்பதை மட்டுமே விரும்புவார்கள்.

சிம்ம ராசி ஒரு நிலையான ராசி என்பதால் இதில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாத குணத்துடனும், அலட்சிய மனோபாவத்துடனும் நடந்து கொள்வார்கள். வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள்.

முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். தன்னுடைய சுய சம்பாத்தியத்தினால் வீடு, மனை போன்றவற்றை அமைத்துக் கொள்வார்கள். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.