முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீச்சு! தேர்தல் பிரச்சாரத்தில் பதற்றம்!

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தஞ்சையின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இறுதியாக நேற்று இரவு ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை தொடர்ந்தார். அங்கு திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிக் கொண்டிருந்தார். தமிழக அரசின் நலத் திட்டங்களையும் பிரதமராக மோடி ஏன் மீண்டும் வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நோக்கி செருப்பு ஒன்று வேகமாக வந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு முதலமைச்சர் மேல் படாமல் முன்னராகவே விழுந்து வேனின் மீது கிடந்தது. செருப்பு பறந்து வந்ததை முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட யாரும் கவனிக்கவில்லை. ஆனால் முதலமைச்சரின் பிரச்சாரத்தை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த சில கேமராக்கள் அதனைப் பதிவு செய்து விட்டது.

தற்போது இந்த காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம் முதல் அமைச்சர் மீது செருப்பு வீசி இது யார் என்கிற விசாரணையும் தஞ்சையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் செருப்பு வீசிய நபரை கண்டுபிடிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். செருப்பு வீசிய நபரை கண்டுபிடிக்க ஒளிப்பதிவு செய்த கேமராமேன்கள் அனைத்து விவரங்களையும் தருமாறு போலீசார் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.