சந்திரயான் 2! இந்திய விண்வெளித்துறையில் ஒரு மாபெரும் பாய்ச்சல்!

சந்திரயான் 2 எனும் நிலவுத் திட்டமானது இந்திய விண்வெளி வரலாற்றில் மிகப்பெரிய சாதனை திட்டமாகும்.


இன்று பிற்பகல் சரியாக 2.43 மணிக்கு பாகுபலி என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 விண்கலம். இந்த விண்கலம் மூன்று பகுதிகளை கொண்டதாகும். முதல் பகுதி ஆர்பிட்டர் எனப்படும். இரண்டாவது பகுதி லேண்டர். 3வது பகுதி ரோவர். இந்த ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும். லேண்டர் என்பது ரோவர் எனப்படும் ஆய்வூர்தியை நிலவுக்கு எடுத்துச் செல்லக்கூடியது.

இந்த மூன்றும் சேர்ந்த அமைப்பு தான் சந்திரயான் 2. அதாவது இந்த சந்திரயான் 2 திட்டத்தின் மிக முக்கிய நோக்கமே நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வது தான். ஏனென்றால் இதற்கு முன்னர் நிலவுக்கு மனிதன் சென்ற போதும் சரி, ஆய்வூர்தி அனுப்பி வைக்கப்பட்ட போதும் சரி வட துருவம் தான் இலக்காக இருந்துள்ளது.

தென் துருவத்தை தற்போது இந்தியா குறி வைத்துள்ளதற்கு காரணம் அங்கு தண்ணீர் மூலக்கூறு அதிகம் இருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை தான். சீனா கடந்த ஜனவரி மாதம் தென் துருவத்தில் தனது ஆய்வூர்தியை இறக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் இந்தியா தற்போது தனது பாகுபலி ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக சந்திரயான் 2வை புவி வட்டப்பாதையில் செலுத்தியுள்ளது. தொடர்ந்து 16 நாட்கள் சந்திரயான் 2 விண்கலம் பூமியை சுற்றி வரும்.

பிறகு ஐந்து நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். அதன் பிறகு சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயர்சூட்டப்பட்டுள்ள லேண்டர் பிரிந்து நிலவில் தரையிறங்கும். பத்திரமாக விக்ரம் தரையிறங்கிய பிறகு அதனுள் இருக்கும் பிரக்யான் எனும் ஆய்வூர்தி நிலவிற்குள் இறங்கி ஆய்வை மேற்கொள்ளும். மொத்தமே 500 மீட்டர் தான் ஆய்வூர்தி பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 500 மீட்டர் பயணித்து ஆய்வு செய்யவா சுமார் 1000 கோடி செலவு செய்து இந்தியா விண்கலத்தை அனுப்பியுள்ளது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த 500 மீட்டர் பயணத்தில் மிக முக்கியமான ஒரு கருவியை நிலவில் செலுத்த உள்ளது பிரக்யான். அதன்பிறகு நிலவு மனிதனுக்கு எட்டும் தொலைவாகிவிடும். அதனால் தான் சந்திரயான் 2 இந்திய விண்வெளித்துறையின் மாபெரும் பாய்ச்சல் என்று கூறப்படுகிறது.