மாலையை பிடுங்கி சவக்குழி வெட்டத்தான் லாயக்கு என்றார்கள்..! சாவு வீட்டில் எஸ்சி - எஸ்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ஊராட்சி தலைவர் ஒருவரை குழி வெட்டுமாறு மேல்சாதியினர் வற்புறுத்தியுள்ள சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அரியாகுஞ்சூர் ஊராட்சியில் பழங்குடியினத்தை சேர்ந்த இருளர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சென்ற ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த தொகுதி பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. 

சின்னக்கல்தாம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பதவி வந்த பிறகு அடுத்த சில மாதங்களிலேயே செல்வத்தை அனுபவிக்கவும் இந்த காலத்தில், முருகேசன் இன்னமும் மின் இணைப்பு கூட இல்லாத வீட்டில் தான் வசித்து வருகிறார். 

விறகுவெட்டி வரும் பணத்தில் தான் முருகேசன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அஞ்சலி செலுத்த சென்ற முருகேசனை மேல்சாதியினர் அவமதித்துள்ளனர். அதுமட்டுமின்றி முருகேசன் கையிலிருந்த மாலையை பிடுங்கி எறிந்து வற்புறுத்தி குழி தோண்ட வைத்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் கூறுகையில், "ஊராட்சி மன்ற தலைவரானதில் இருந்து மன்றத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. துணைத்தலைவரும் வேறு சிலரும் கையெழுத்து போட சொல்லும் இடத்தில் கையெழுத்து போடும் நிலையில் உள்ளேன்.

பெயருக்கு மட்டுமே ஊராட்சி மன்ற தலைவராக உள்ளேன். என்னை கொத்தடிமை போல் நடத்தி வருகின்றனர். நீ குழி வெட்டுவதற்கு மட்டும்தான் உகந்தவன் என்று கூறி என்னை ஒரு இறப்பு நிகழ்வில் அவமதித்தனர். ஊராட்சி மன்றத்தின் அனைத்து நிர்வாகத்தையும் துணைத் தலைவர் சிவானந்தம் தான் கவனித்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.

பழங்குடியின பிரிவை சேர்ந்த தலைவரை வேலை செய்யாமல் தடுப்போர் மீது வன்கொடுமை சட்டம் பாய்வதற்கான வாய்ப்புண்டு என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியானது தொலைக்காட்சிகளில் வெளியான பிறகு வைரலாகி வருகிறது.