கோயிலில் தரும் விபூதி, குங்குமத்தை என்ன செய்ய வேண்டும்? தெய்வ வழிபாட்டில் தவிர்க்கவேண்டிய செயல்கள் இதோ...

ஆன்மீக வழிபாடு சிறப்புக்குரியது. இறைவனை வழிபடுவது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.

மேலும், ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். அந்தவகையில் தற்போது தெய்வ வழிபாட்டில் நாம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத சில செயல்கள் பற்றி பார்ப்போம்.

பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என அழைக்கப்படும் பிற சந்நிதிகளிலும் வழிபாடு செய்ய வேண்டும். நெய் தீபமேற்றி உதிரிப் பூக்களை சமர்ப்பிக்கலாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வை தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது.

விபூதி, குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு காகிதத்தில் மடித்து எடுத்துச் செல்லவும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்ற வேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம் யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்த பின் உண்ணவும்.

ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை காகிதத்தில் வாங்கக்கூடாது.

ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் தீபம் ஏற்றவும். சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்களை பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்துவிடக்கூடாது.

பன்னீர் ரோஜா, தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, வில்வம், சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, விருட்சிப்பூ, அருகம்புல் போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது. காளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை.