கிரகப்பிரவேசம் செய்யப் போறீங்களா..? நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!

கிரகப் பிரவேசம் என்று சொல்ல வேண்டும். கிரஹப்ரவேசம் அல்ல.


க்ருஹம் என்றால் வீடு. கிரஹம் என்றால் வானத்தில் உள்ள கோள்களைக் குறிக்கும். கிரகப் பிரவேசம் என்று அழைக்கப்படுகின்ற புதுமனை புகுவிழா செய்வதற்கு என்று ஒரு சில முக்கியமான விதிமுறைகள் உண்டு.

முதலாவதாக அந்த வீட்டினில் தரை போடப்பட்டிருக்க வேண்டும். அது சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி, அல்லது டைல்ஸ், மார்பிள், கிரானைட், மார்போனைட் என்று எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, எதனைப் பயன்படுத்தப் போகிறோமோ அதனைக் கொண்டு தரையினை அமைத்திருக்க வேண்டும்.

ஒரு சிலர் மார்பிள் பதிக்கப்போகிறோம், மார்பிள் பதித்துவிட்டு க்ருஹப்ரவேச ஹோமம் செய்தால் தரை அழுக்காகிவிடும் என்ற எண்ணத்தில் வெறும் சிமெண்ட் கலவையை மட்டும் லேசாகப் பரப்பி அதனை பெருக்கித் துடைத்துவிட்டு புதுமனை புகுவிழா நடத்திவிடுகிறார்கள். பூஜைகளையெல்லாம் முடித்துவிட்டு சாவகாசமாக தரைக்கு மார்பிள் பதிக்கிறார்கள்.

இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. எந்தத் தரையை வீட்டினில் உபயோகப்படுத்தப் போகிறோமோ அதை போட்டு முடித்துவிட்டுத்தான் கிரஹப்ரவேசம் நடத்த வேண்டும். ஹோமத்தினால் கரை ஏதும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு பல வழிகள் உண்டு.

இரண்டாவதாக சுற்றுச்சுவர் பூசப்பட்டிருக்க வேண்டும். உட்புறச் சுவரும், வெளிப்புறச் சுவரும் பூசப்பட்டு அதற்கு வெள்ளை அடித்திருக்க வேண்டும். மெதுவாக வண்ணப்பூச்சுகளை அடித்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை.

அடுத்ததாக வாயிற்கதவு போட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் வாசக்கால் மட்டும் வைத்துவிட்டு கதவு போடாமல் புதுமனை புகுவிழாவினை நடத்துகிறார்கள். இது முற்றிலும் தவறு. கதவு டிசைன் செய்து வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தை முன் வைக்கிறார்கள். வாயிற்கதவு தயாரான பிறகுதான் புதுமனை புகுவிழாவை நடத்த வேண்டும். நான்காவது விதியானது புதுமனைபுகுவிழாவின் போது பஞ்சமஹாயக்ஞத்தினை நடத்த வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

ஐந்தாவதாக புதிய வீட்டினில் கிரகபிரவேச பூஜைகளை முடித்தவுடன் குறைந்தது பத்து நபர்களுக்காவது போஜனமிட வேண்டும். தற்காலத்தில் இடவசதி கருதி புதிய வீட்டிற்குள் பந்தி பரிமாறுவதை விடுத்து எதிர்வீடு அல்லது அருகில் உள்ள காலிமனை, போர்ட்டிகோ முதலான இடங்களில் வைத்து உணவளிக்கிறார்கள்.ப்இதுவும் தவறான முறையே. உணவளிக்கும் இடமானது க்ருஹப்ரவேசம் செய்யப்படுகின்ற வீட்டின் வாசற்படிக்கு உள்ளே இருப்பதாக அமைய வேண்டும். வாசற்படியைக் கடந்து வீட்டிற்குள் வந்து அமர்ந்துதான் விருந்தினர்கள் உணவருந்த வேண்டும்.

கிரகபிரவேசத்திற்கு நாள் குறிக்கும்போது வாரசூலையை கணக்கில் கொண்டு சூலம் இருக்கும் திசையை அறிந்து குடும்ப ஜோதிடரின் துணைகொண்டு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பால் காய்ச்சிய கையோடு குறைந்த பட்சமாக சர்க்கரைப் பொங்கல் செய்து பூஜை அறையில் நைவேத்யம் செய்து அந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் உட்கொள்ள வேண்டும்.

கிரகபிரவேசம் செய்கின்ற நாளில் மனை ஏறிய தம்பதியர் மற்றும் அந்த வீட்டு எஜமானரின் குடும்பத்தினர் அனைவரும் அன்றிரவு அந்த வீட்டிலேயே தங்க வேண்டும். இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடித்து புதுமனை புகுவிழா செய்வோரின் இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நீடித்திருக்கும்.