குங்குமம் எந்த விரலால் வைக்க வேண்டும்? பூஜை விளக்கை பூவைக் கொண்டு அணைக்கலாமா? அற்புதமான ஆன்மிகத் தகவல்கள்

கடவுளை வணங்குகிறவர்கள் வழிபாட்டு விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.


கோவிலுக்கு போனோம், சாமி கும்பிட்டோம், தல விருட்சத்தை சுற்றினோம் என்று வந்துவிடக் கூடாது. ஏன் மரத்தைச் சுற்றுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுவது அவசியம்.

சிலர் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கோவிலை வலம் வருவார்கள். அப்படி அங்கப் பிரதட்சணம் செய்கிறவர்கள் காலை வேளையில் செய்வதே நல்லது.

வலம்புரி சங்கில் மகாலட்சுமி இருக்கிறாள் என்று சொல்வார்கள். அதனாலேயே தெய்வங்களுக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்கிறார்கள்.

சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு உகந்த நாள். அன்று மனதில் நினைத்து பிள்ளையாரை வணங்கினால் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

துளசி விஷ்ணுவுக்கு பிடித்தமானது என்பதால் வீட்டில் துளசிச் செடியை வைத்து வழிபடுதல் மிகவும் அவசியம்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு பூ உண்டு. உதாரணத்திற்கு சிவனுக்கு வில்வம், பிள்ளையாருக்கு அருகம்புல் என்று உண்டு. அந்தந்தத் தெய்வத்துக்கு அந்தந்தப் பூக்களை வைத்து வணங்கினால் உங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.

வீட்டில் பூஜை அறையில் விக்ரகங்களை வைத்து பூஜை செய்து வருகிறவர்கள் தினமும் நைவேத்தியம் செய்யவேண்டும்.

பொதுவாக குங்குமத்தை வலது கை மோதிர விரலால் நெற்றியில் இட்டுக் கொள்வதே நல்லது.

அரி, அரன், பிரம்மா ஆகிய தெய்வங்கள் குடியிருக்கிற அரசமரத்தை பெண்கள் மட்டும்தான் வலம் வரவேண்டும் என்றில்லை. ஆண்களும் வலம் வரலாம்.

வீட்டில் தினமும் விளக்கேற்றி வழி வழிபடுகிறவர்கள் விளக்குத் தானாகவே அணைய விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். விளக்கை ஒரு பூவைக் கொண்டு அமைதி பெறச் செய்வதே நல்லது.

கோயிலைச் சுற்றி வரும் போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு முறை உள்ளது. பிள்ளையாரை ஒரு முறை சுற்றி வந்தால் போதும். அம்மனை தரிசிக்கும்போது நான்கு முறை சுற்றி வர வேண்டும். அரச மரத்தை 7 முறை சுற்ற வேண்டும். அதேபோல் நவக்கிரகங்களை 9 முறை சுற்ற வேண்டும்.

குடும்பத்தில் உள்ள எல்லாத் துன்பமும் நீங்க வேண்டுமானால் பெண்கள் துர்க்கையை வழிபடுவது நல்லது.

வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள் அவர்கள் வீட்டின் முன்புறத்தில் துஷ்ட தேவதைகளை விரட்ட வேப்ப மரத்தை வளர்ப்பது நல்லது. வீட்டுக்குப் பின்புறத்தில் முருங்கை மரத்தை வளர்ப்பதுதான் நல்லது.

பெண்கள் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றுதல் கூடாது. தலைக்குக் குளித்த பின் நுனியை முடியாமல் விரித்துப் போட்டுக் கொண்டு சுற்றுதல் தவறு.

கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.

கோவிலை விட்டு வெளியே போகும்போது சில நிமிடங்கள் உட்கார்ந்து பிறகு செல்ல வேண்டும். அப்போது கோபுர தரிசனம் செய்வது நல்லது.

பூஜை அறையில் உள்ள பாத்திரங்களையும் விக்ரகங்களையும் சுத்தமாகவும், பளிச்சிடும் படியும் வைத்துக் கொள்ளவேண்டும்.

கால பைரவர் சிவபெருமானின் பிரதி என்பர்.  சிவன் கோவில்களில் வடகிழக்கு மூலையில் எழுந்தருளியிருப்பார். அவர் காலத்தை உருவமாகக் கொண்ட கால புருஷன் என்பதால் 12 ராசிகளும் அவருடைய உருவப் பகுதிகள் என்று பிரஹத் ஜாதகம் என்ற நூல் கூறுகிறது. 12 ராசிகளும் ஒருங்கே பெற்ற கால பைரவரை வணங்க நவக்கிரகத் தொல்லைகள் நீங்கும்.