விவசாயிகளின் இலவச மின்சார உரிமையை பறிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளையும் தடுத்து நிறுத்துவோம் என்று சீமான் ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலவச மின்சார உரிமையை பறிக்கும் மத்திய அரசு! மோடியை கடுமையாக சாடிய சீமான்!

உலகில் வேளாண்மையைக் கைவிட்ட எல்லா நாடுகளும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றன. வேளாண்மை என்பது வெறுமனே ஒரு தொழிலல்ல; அது நம் பண்பாடு, வாழ்வியல் முறை. அத்தகைய வேளாண்மை செழித்து வளர்ந்தோங்குவதற்கு, வேளாண் குடிமக்கள் வாழ்வதற்குப் பல போராட்டங்களை நம்மின முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். பாசனத்திற்குப் பயன்படுத்துகிற நீரினைப்பெற தேவையான மின்சாரத்திற்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எண்ணற்ற வேளாண் குடிமக்கள் போராடியிருக்கிறார்கள்.
இன்று மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசு, ‘புதிய மின் அலகு திட்டம்’ என்ற ஒன்றை கொண்டுவந்து அதையும் பறிப்பதற்கு வேலை நடக்கிறது. நாம் அதற்கெதிராக நம் முன்னார்களைப் போல மாபெரும் மக்கள் புரட்சிக்கு அணியமாக வேண்டும் என்பதுதான் உயிர்த்தியாகத்தின் மூலம் உழவுக்குக் கட்டணமில்லா மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்த நம் முன்னோர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழியாகும். ஆகவே, கட்டணமில்லா மின்சாரத்தை உழவுக்குப் பெற்றுக் கொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடித்திட உறுதியேற்போம்.
உலகின் எல்லாப்பொருள்களுக்கும் அதனை உற்பத்தி செய்கிறவர்களே விலையை தீர்மானிக்கிறபோது வேளாண் பொருள்களுக்கு மட்டும் வாங்குகிறவர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது அளவிட முடியா பெருந்துயரம்; பேரவலம். அதனாலேயே, உழவாண்மை நலிந்து வேளாண் குடிமக்கள் வாழ முடியாத கொடுஞ்சூழல் உருவாகிப்போனது. எனவே, அந்த வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்கு, விவசாயிகளை வாழ வைப்பதற்கு இலவச மின்சாரத்தை அரசு கொடுத்துதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் எழுந்தன.
முதன்முதலில் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் விவசாயிகளின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதியன்று மூன்று வேளாண் குடிகள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்கள். அந்தநாளை ஒவ்வொரு உழவன் குடிமகனும் தலைமுறை தலைமுறையாக வருகிற அவர்களது பிள்ளைகளும் நன்றியுணர்வோடு நினைவுகூற வேண்டிய வரலாற்று பெருங்கடமை நம் ஒவ்வொருவருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.