திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம்..! மத்திய அரசு அதிரடி அனுமதி! அரசாணை இதோ..!

நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.


வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் 3வது கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள 733 மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களின் அடிப்படையில் மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன. அதிக பாதிப்பு உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்கள்.

குறைந்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள் ஆகும். கொரோனா பாதிப்பு அறவே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகும். சிவப்பு மண்டலங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் மதுபானக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் பார்கள் செயல்படாது.


கடைகளை திறந்து மதுபானங்களை விற்பனை செய்ய மட்டும் அனுமதி. அதிலும் கடையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்க கூடாது. கடையில் மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம்.

தமிழகத்தில் பொறுத்தவரை சுமார் 11 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக உள்ளன. எனவே அங்கு டாஸ்மாக் கடைகளை திறப்பதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது. அதே போல் சிவப்பு மண்டல மாவட்டங்களில் கூட தாலுக்காக்கள் அடிப்படையில் கொரோனா பாதிப்பை கணக்கிட்டு அங்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம்.

அதே சமயம் கிராமப்பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க எந்த தடையும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.