தந்தையுடன் வீடியோ கால்..! திடீரென வெடித்த செல்போன்..! இளம்பெண் பார்வை பறிபோன பரிதாபம்!

வெளிநாட்டில் உள்ள தனது தந்தையுடன் வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கும்போது செல்போன் வெடித்து சிதறியதால் இளம் பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுகுமார் ஆவார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 18 வயதாகும் இவரது மகள் ஆர்த்தி வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தையுடன் நேற்று காலை வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போன் வெடித்து அதன் பாகங்களில் இருந்து வெளிப்பட்ட சிறு துகல்கள் அவரது இரண்டு கண்களுக்குள் புகுந்ததால் அவரது இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டன. இதனால் வலியால் துடித்த ஆர்த்தியை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை உடனடியாக நீடாமங்கலம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களால் முதலுதவி செய்யப்பட்டு அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப் பட்டார். தற்போது அங்கே அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செல்போனை சார்ஜரில் போட்டு பேசியதால் செல்போன் வெடித்து இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டிலுள்ள தந்தையுடன் மகள் வீடியோ கால் பேசும்போது செல்போன் வெடித்து கண்கள் பாதிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.