பகவான் கிருஷ்ணர் தொடங்கிவைத்த ராக்கியின் மகிமை தெரியுமா?

ரக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம்.


இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.  இந்த வருடம் ஆகஸ்டு 15 ஆம் தேதி இப்பண்டிகை தினமாக கருதப்படுகிறது.

பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார்.

அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.

மற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார்.

பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார். ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா ‘பாலிவா என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

ராக்கி பூர்ணிமா தினம் மிகவும் புனிதமான தினமாக கருதப்படுகிறது. ராக்கி கட்டும் சடங்கு போக, இந்த பண்டிகையின் போது, இந்திய முழுவதும் இன்னும் பல சடங்குகளும் பின்பற்றப்படுகிறது. வட இந்தியாவில், கோதுமை மற்றும் பார்லி போன்ற பயிர்கள் நடப்படும்போது, பகவதி தேவியை வணங்கும் போது, ராக்கி பூர்ணிமாவை கஜரி பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர்.

மேற்கு இந்தியாவில், இதனை நாரியல் பூர்ணிமா என அழைக்கின்றனர். அன்று வருண பகவானான கடல் பகவானுக்கு தேங்காய் வைத்து படைப்பார்கள். தென் மாநிலங்களில் இதனை ஷ்ரவன் பூர்ணிமா என அழைக்கின்றனர். இதனை மிகவும் புனிதமான நாளாக கருதுகின்றனர்.

ரக்க்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது. 

உறவுகள், பாசம், அன்பு, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் இவைகள் நிரம்பியவைதான் குடும்பம். இவையெல்லாம் ஒரு குடும்பத்தில் இருந்தால் குடும்ப வாழ்க்கை ஒற்றுமையுடன் இருக்கும், இனிதாக இருக்கும்.  இந்த ஒற்றுமையை போற்றும் நாளே ரக்க்ஷா பந்தன்.