3 வருசத்தில் 81வது ஆணவக் கொலை! நந்தீஷ் - சுவாதி கொல்லப்பட்டது இப்படித்தான்!

சற்றே தணிந்திருந்த சாதிப் படுகொலை மீண்டும் தலை தூக்கியுள்ளது. நந்தீஷ் - சுவாதி மரணமாவ்து கடைசியாக இருக்குமா?


விருந்தோம்பலுக்கு புகழ் பெற்றது தமிழர் கலாசாரம். அதாவது முகம் தெரியாத மனிதருக்கும் உதவி செய்வது தமிழர் பழக்கம். ஆனால், இன்று ஆணவப் படுகொலையின் தாயகமாக மாறிவருகிறது தமிழகம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்திருக்கும் 81_வது ஆணவப் படுகொலை என்று நந்திஷ் _ சுவாதி கொலையை சொல்கிறார்கள், மனித உரிமை ஆர்வலர்கள். நெஞ்சை பதறவைக்கும் அந்த கொடூர சம்பவம் இதுதான்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி, வெங்கடேஷபுரத்தைச் சேர்ந்தவர் நந்தீஷ். ஓசூர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நந்தீஷ், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் வன்னிய இனத்தைச் சேர்ந்த சுவாதிக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. திருமணத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தோன்றவே, ஆகஸ்ட் 15ம் தேதி, ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள். 

இளம் தம்பதியர் இனிமையாக வாழ்ந்துவந்த நேரத்தில் திடீரென மாயமாக மறைந்திருக்கிறார்கள். இதுகுறித்து கடந்த 11ம் தேதி காவல் நிலையத்தில், நந்தீஷின் தம்பி புகார் கொடுத்திருக்கிறார். எங்காவது ஓடிப் போயிருப்பார்கள் என்று அசட்டையாக இருந்திருக்கிறது போலீஸ்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலஹள்ளி அருகே காவிரி ஆற்றில், இரண்டு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அடித்து கொல்லப்பட்ட தடயத்துடன் காணப்பட்ட உடல்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அவர்கள் நந்தினி _ சுவாதி என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையை நான்தான் செய்தேன் என்று சுவாதியின் தந்தை போலீஸில் சரண் அடைந்துள்ளார். கொலைக்கு உறுதுணையாக இருந்த சிலரை இப்போது காவல் துறை கைது செய்துள்ளது.

கடுமையாக சட்டங்கள் இயற்றப்படும் நிலையிலும் ஆணவப் படுகொலை அதிகரித்துவருவது வேதனைக்குரியது. சாதிய வேர்களை உருத்தெரியாமல் அழிக்கும் வகையில் சமுதாய மாற்றம் ஏற்பட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தும் சமூகம் உருவாக வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஆணவப் படுகொலை நடைபெறாமல் போகும்.