ஒரு பன்றி விலை ரூ.5000! ஒரு ஓட்டின் விலை ரூ500! மக்களை சிந்திக்க வைத்த சுவரொட்டிகள்!

ஓட்டை காசுக்கு விற்காமல் தன்மானத்துடன் செயல்படவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பல்லடம் அருகே சுவரொட்டி கிடந்துள்ளது.


சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் தரும் பழக்கம் அதிகரித்துள்ளது. யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் ஜனநாயகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு முயன்றும் ஓட்டுக்கு பணம் தருவதை தேர்தல் ஆணையத்தால் முழுவதுமாக கட்டுப்படுத்த இயலவில்லை.

எடுத்துக்காட்டாக இந்த மாத இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கிராமப்புற மக்கள் எந்த வேட்பாளர் அதிக பணத்தை தருகிறாரோ அவருக்கு உதவ முடிவு செய்துள்ளதாக ஆங்காங்கே செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தகைய இக்கட்டான சூழலில் பல்லடம் பகுதியில் " எருமை மாடு விலை 50,000, பசு மாடு விலை 40,000, நாய் விலை 25,000 ஆடு விலை 10,000, பன்றி விலை 3,000; ஆனால் ஒரு ஓட்டுக்காக தரப்படுவது வெறும் 500,1000. ஒரு பன்றியின் விலையைவிட நம் ஓட்டின் விலை மிகக்குறைவாக உள்ளது. எனவே மக்கள் நன்றாக சிந்தித்து தன்மானத்துடன் வாக்களியுங்கள்" என்று ஒரு சுவரொட்டியில் காணப்பட்டது.

இந்த சுவரொட்டியானது கரைப்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரைப்புத்தூர், பாசங்காட்டுபாளையம், அருள்புரம் ஆகிய இடங்களில் காணப்பட்டுள்ளன.

இந்த போஸ்டரானது ஓட்டுக்கு பணம் தர தயாராக உள்ளனர் அரசியல் கட்சிகளுக்கு மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பலர் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.