சட்டரீதியாக விஜய் டி.வி.யுடன் மோத ரெடி..! களம் இறங்கிய மதுமிதா

பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பல திருப்புமுனைகளையும் சுவாரஸ்யங்களையும் பெற்று மக்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

சென்ற வார இறுதியில் போட்டியாளரான நடிகை மதுமிதா ஷெரீனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவி நிறுவனமானது மதுமிதா மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது. 

ஏசியாநெட் குழுமத்தின் சட்ட ஆலோசகர் பிரசாத் என்பவராவார். இவர் கிண்டி காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், "சென்ற வாரம் வரை பிக்பாஸ் போட்டியில் இருந்த மதுமிதா தன்னை தற்கொலை செய்து கொள்வதாக ஆவேசமாக கூறினார். இதனால் பிக்பாஸில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவருடைய கையை அறுத்துக்கொண்டார். இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

ஏற்கனவே மதுமிதா செய்திருந்த ஒப்பந்தத்தின்படி அவரிடம் 11,50,000 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. ஒரு நாளுக்கு அவருக்கு 80,000 ரூபாய் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர் விட்டு சென்ற 42 நாட்களுக்கு கணக்கு செய்து அவரிடம் பணத்தை திருப்பி அளிப்பதாக கூறியிருந்தோம். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரின் பெயர் டீனா. 19-ஆம் தேதியன்று வாட்ஸ்அப் மூலம் டினாவை மதுமிதா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது 2 நாட்களுக்குள் பணத்தை திருப்பி தராவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை பதிவு செய்துக்கொண்ட கிண்டி காவல்துறையினர் நடிகை மதுமிதாவை விசாரிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதனிடையே வளசரவாக்கத்தில் வசித்து வரும் மதுமிதா கூறுகையில், "விஜய் டிவியுடன் ஒப்பந்தத்தில் இருப்பதால் என்னால் எதுவும் சொல்ல இயலாது. இந்த வழக்கை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.