வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்..! மனைவியை பார்க்க அதிவேகம்..! குளத்துக்குள் பாய்ந்த கார்..! என்ஜினியருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!

தாறுமாறாக ஓடிய கார் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் என்ஜினியர் இறந்த சம்பவமானது மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட மாதா காலனியை பூர்வீகமாக கொண்டவர் மரிய விபலிஸ். இவருடைய வயது 42. இவருடைய மனைவியின் பெயர் ஹெப்ஸி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் விபலிஸ் வெளிநாட்டில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சென்ற மாதம் இந்தியா வந்தடைந்தார்.

இதனிடையே‌ ஒரு வாரத்திற்கு முன்பு ஹெப்ஸி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு கேரள மாநிலத்திலுள்ள விழிஞ்ஞனம் இப்பகுதியில் வசித்து வரும் தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருவதற்காக விபலிஸ் நேற்று முன்தினம் இரவு காரில் புறப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் பகுதிக்கு அருகே உள்ள கொல்லங்கோடு வெங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

சாலையோரத்தில் அமைந்திருந்த குளத்துக்குள் கார் மூழ்கியது. தகவலறிந்த கொல்லங்கோடு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு காரின் கண்ணாடியை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த விபலிஸை வெளியே எடுத்து அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் விபலிஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இந்த சம்பவமானது மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.