டூவீலரில் சென்னை நோக்கி பறந்த நண்பர்கள்! எதிரே அதிவேகத்தில் வந்த கார்! நொடியில் பறிபோன 2 உயிர்!

இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 2 இளைஞர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது ஆற்காட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆற்காடு பகுதியில் மொழுகம்பூண்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 22. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது. வெங்கடேஷின் வயது 20. வெங்கடேஷ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இருவரும் நண்பர்களாகினர்.

நேற்று இருவரும் சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். விளப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

துரதிஷ்டவசமாக கார் இவர்களது பைக் மீது வேகமாக மோதியது. மோதி அதிர்ச்சியில் இருவரும் சற்று தூரம் பறந்து சென்று விழுந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் காரை ஓட்டிய டிரைவர் தப்பித்து சென்றுவிட்டார். 

அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்துக்கு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாகியுள்ள ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஆற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.