ஓட்டலில் தகராறு! செய்தியாளர்களுக்கு மிரட்டல்! ஆப்கன் கேப்டன் அடாவடி! ஏன் தெரியுமா?

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான குலபதின் நைப் செய்தியாளர் சந்திப்பில் இருந்து திடீரென வெளியேறிய சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆப்கானிஸ்தான் அணி நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மார்கனின் ருத்ரதாண்டவத்தில் ஆப்கானிஸ்தான் அணியினர் துவண்டு போயினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து 397 என்ற இமாலய ஸ்கோரை அடைந்தது.

398 என்ற கடினமான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியினர் தொடக்கத்திலிருந்தே சிரமப்பட்டனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்தனர். இதன் மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

செவ்வாய்க்கிழமையன்று ஆப்கானிஸ்தான் அணியினர் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பாரில் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் மான்செஸ்டர் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்றும் அவர்கள் தரப்பிலிருந்து தகவல் தெரிவித்தனர்.

தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன்  குல்பதின் நைப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோல்வி குறித்து பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. மான்செஸ்டர் பாரில் நடந்த வாக்குவாதத்தை பற்றி அவரிடம் கேட்டபோது, இதுவரை அதைப்பற்றி நான் கேட்கவில்லை ஆதலால் பதில் கூற முடியாது என்று கூறினார்.

மீண்டும் அதே கேள்வியை கேட்ட உடன் எரிச்சல் அடைந்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறுவதாக கூறினார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி சந்திப்பை முடித்தனர். இந்த சம்பவமானது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.