30 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி! கிளர்ந்து எழுந்த மக்கள்! சிறை பிடிக்கப்பட்ட அதிபர்!

சூடான் நாட்டு அதிபரை அந்நாட்டு ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது.


சூடான் நாட்டின் அதிபராக இருப்பவர் ஒமர் அல் பஷீர். சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கவிழ்த்து 1989 ஆம் ஆண்டில் இவர் அரியணை ஏறினார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இவர் சூடான் நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். ஆப்பிரிக்க நாடுகளிலேயே மிக அதிக காலம் பதவி வகித்த தலைவராகவும் இவர் உள்ளார்.

ஆனால் உமர் அல் பஷீரின் இரும்புக்கர ஆட்சியை விரும்பாத மக்கள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர். இதுவே தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சூடான் அதிபரை அந்நாட்டு ராணுவம் ரகசிய இடத்தில் சிறைபிடித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர், நாட்டின் தலைவரை சிறை பிடித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை நாட்டின் எல்லைகள் மற்றும் வான் பரப்புகள் மூடப்படுவதாக அவர் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். சூடான் நாட்டு அதிபர் மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.