ஊரடங்கு நாளில் மாலையும் கழுத்துமாக காட்சி அளித்த கேப்டன் - பிரேமலதா! ஏன் தெரியுமா?

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், வீட்டில் இருந்தபடியே திருமண நாள் கொண்டாடினார்.


சினிமா மட்டுமின்றி அரசியலிலும் குறுகிய காலத்தில் அதிரடியாக தடம் பதித்தவர் விஜயகாந்த். தேமுதிகவை தொடங்கி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய அவர், கலைஞர், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, தற்போது சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார். அதனால், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, விஜயகாந்த், தனது 30வது திருமண நாளை நேற்று கொண்டாடினார். அவரது வீட்டில் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் முன்னிலையில், விஜயகாந்த், பிரேமலதா தம்பதியினர்  மாலை மாற்றி திருமண நாளை கொண்டாடினர்.

வழக்கமாக, அவர்களின் திருமண நாள், பிறந்த நாள், தேமுதிக சார்பாக பிரமாண்ட விழாவாக நடத்தப்படும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதனை எளிய நிகழ்வாக வீட்டிலேயே நடத்தி முடித்துவிட்டதாக, குடும்பத்தினர் தெரிவித்தனர்.

துதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. புகைப்படத்தில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார். பார்ப்பதற்கு, அவர் உடல்நலம் தேறியுள்ளதாக, தேமுதிகவினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.