என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே! திருப்பூரில் கர்ஜித்த கேப்டன்! நெகிழ்ந்து ஆர்ப்பரித்த தொண்டர்கள்!

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் பேசியது அவரது கட்சியினரை ஆர்ப்பரிக்கச் செய்தது.


உடல் நிலை பாதிக்கப்பட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து திரும்பினார். சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதை விஜயகாந்த் தவிர்த்தார். இதற்கு காரணம் அவரால் முன்பு போல் பேச முடியாமை தான். 

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கூட பேசுவதை கேப்டன் தவிர்த்தார். அனைத்தும் சைகையிலேயே நடைபெற்றது. கூட்டணி ஒப்பந்தம் தொடர்பாக கையெழுத்திட வந்த போது கேப்டன் எதுவும் பேசவில்லை. அவரது நடையிலும் தடுமாற்றம் இருந்தது.

இதனால் கேப்டன் அவ்வளவு தான் என்கிற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து சைகை மூலம் வாக்கு சேகரித்துவிட்டு திரும்பினார். தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் கேப்டன் உடல்நிலை குறித்து மேலும் வதந்திகள் வந்தன. இவற்றை எல்லாம் பொய்யாக்கும் வகையில் கேப்டன் திருப்பூரில் நடைபெறும் தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கேப்டன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

வழக்கம் போல் தனது கர்ஜனை இல்லாவிட்டாலும் அவர் பேச ஆரம்பித்தது கர்ஜித்தது போல் தான் இருந்தது. அதிலும் என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே என்று கேப்டன் குறிப்பிட்ட போது தொண்டர்கள் ஆர்ப்பரிப்பால் திருப்பூர் நகரமே அதிர்ந்தது.