தமிழகத்தில் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தோல்வியடைந்த பலர் விரக்தியில் மக்கள் தங்களுக்குத்தான் வாக்களித்தார்களா என வினோதமான முறையில் கேட்டு வருகின்றனர்.
கருப்பசாமி கோவில்..! கோழி ரத்தம் மீது சத்தியம்..! பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாததால் வந்த விபரீதம்! மிரள வைத்த வேட்பாளர்!
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தேர்தல் முகவராக இருப்பார். அதில் தேர்தலில் போட்டியிட்ட விஜயகுமாருக்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா என்பதை உறுதி செய்ய பல கோணங்களில் கேள்வி கேட்பார். அவர்கள் சத்தியம் செய்து கூறும் பதிலை பார்த்து அதிர்ச்சி அடைவார். அந்த நகைச்சுவை தற்போதும் டிரெண்டிங் ஆகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தோல்வி அடைந்துவிட்டதால் கிராம மக்களை அழைத்துவந்து தங்களுக்குதான் வாக்களித்தோம் என கோழி ரத்தத்தில் சத்தியமிடுமாறு மிரட்டுவதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அரியகுடி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு 4 பெண்கள் போட்டியிட்டனர். தோல்வியடைந்த 3 பெண்கள், தேர்தலின்போது தங்களுக்கு வாக்களிக்க பணம் பெற்ற கிராம மக்களை ஊர் மத்தியிலுள்ள சமுதாய கூடத்துக்கு அழைத்து வந்து சேவலை அறுத்து ரத்தம் பிடித்து, அதன்மீது சத்தியம் செய்யும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த செல்போன் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.