இனமானத் தமிழன் விஜய் சேதுபதி இப்படி செய்யலாமா..? வேதனையில் ரசிகர்கள்.

இலங்கை தமிழர்கள் கொலையை நியாயப்படுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்த விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சி எழுந்துள்ளது.


இந்த நிலையில், இதுகுறித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறார் பிரபல பதிவர் ம.தொல்காப்பியன். அந்த பதிவில், விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து!

ஆயினும், கலையோடு அரசியலை கலப்பது ஆபத்து என்ற கருத்தை உடையவன் நான். சினிமாவுக்கு வெளியில் இருந்து, ஒரு சினிமாவை வெளியிடக் கூடாது, தடை செய்ய வேண்டும் என்று வரும் கண்டனங்களை நான் வெறுப்பவன். அரசியல், சாதி, மதம், இனம், மொழி என்கிற பெயரில் ஒரு படைப்பை மறுதலிப்பதும், அந்த படைப்புக்கு எதிராக போராடுவதும், அதை வெளியிட தடை கோருவதும் பெரும் சமூக இழிவு என்று நம்புபவன் நான்! அந்த வகையில் ஒரு படம், அது எந்த வகையான அரசியலை பேசினபோதும், ஒரு நடிகனை அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்று சினிமாவுக்கு வெளியில் இருந்து வரும் குரல்கள் ஒழுங்கற்றவை என்பதே எனது நிலைப்பாடு!

அதே நேரத்தில், இதுபோன்ற சர்ச்சைகள் எழும்போது ஓர் ஆளுமை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கலைஞர் நமக்கு அறிவுறுத்தி வைத்து இருக்கிறார். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தன் ஆயுள் முழுதும் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் கடவுள் நம்பிக்கைக்கு எதிர் விமர்சனம் செய்து வந்தவரும் ஆன கலைஞர், கேடி நித்தியானந்தா சர்ச்சையில் எப்படி நடந்து கொண்டார்? “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று சொல்லி விட்டு அந்த வழக்கில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அத்தோடு அந்த வழக்கை கர்னாடகத்துக்கு தள்ளியும் விட்டார்.

கலைஞர் நினைத்து இருந்தால் அந்த வழக்கை கையில் எடுத்து நித்தியானந்தாவை சட்டப்படி துவம்சம் செய்து இருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்ய வில்லை. ஏன்? ஏன் என்றால், பெருவாரியான மக்களின் உணர்ச்சிகரமான சாரத்தில் அவர் நுழைய விரும்பவில்லை. இது மதிக்கத் தக்க, பின்பற்றத் தக்க ஒரு முடிவாக நான் பார்க்கிறேன்.

ஆனால், அதே மாதிரியான ஒரு சர்ச்சையில் சங்கராச்சாரியாரை கைது செய்து அவரை உலகத்தின் முன்னால் அவமானப் படுத்தினார் ஜெ.ஜெயலலிதா! இதுதான், ஒரு மக்கள் ஆர்வலருக்கும் ஒரு சுயநல ஆர்வலருக்கும் இடையேயான வெறுபாடு!

கலைஞர் என்கிற மக்கள் ஆர்வலரின் நிலைப்பாட்டைத்தான் ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதியும் எடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஒட்டு மொத்த தமிழ் இனமும் பொங்கிப் பிரவகிக்கும் ஒரு சாரத்தில் விஜய் சேதுபதி போன்ற ஓர் ஆளுமை சற்றே பின்வாங்கிச் செல்வதே நலம் பயக்கும் முடிவாக இருக்கும். அவருக்கு மட்டும் அல்ல; அவரை பின்பற்றும் லட்சக் கணக்கான ரசிகத் தமிழர்களுக்கும் அதுவே நலம் பயக்கும் முடிவாக இருக்கும்! 

கண் முன்னே ஒன்றரை லட்சம் தமிழர்கள் மாடுகளைப் போல, பன்றிகளைப் போல, நாய்களைப் போல மந்தைகள் ஆக்கப்பட்டு கொடுமைபடுத்தி கொல்லப்பட்ட காட்சிகளை உலக தமிழ்ச் சமூகம் என்றைக்குமே மறக்காது. அப்படிப்பட்ட உணர்ச்சிகரமான சாரம் ஒன்றில் விஜய் சேதுபதி விளையாட்டுக் காட்டக் கூடாது என்கிறார்.