பிரதமர் மோடி செய்யவேண்டிய வேலையை ஜெய்சங்கர் செய்யலாமா? உரக்க கேள்வி எழுப்பிய வைகோ!

மாநிலங்களவையில் வைகோ முதன்முறையாக மோடிக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பி பேசியிருக்கிறார்.


ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து, மன்மோகன்சிங் காலம் வரையிலும், பிரதமர் வெளிநாடுகள் சென்று வந்தால், அதுகுறித்து, அவரே மாநிலங்களவைக்கு வந்து விளக்கம் அளிப்பார்கள். இதுதான் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி உலகம் சுற்றி வருகின்றார். பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார். அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி ஜின்பிங் ஆகியோரோடு உரையாடுகிறார். ஆனால், அவர்களிடம் என்ன பேசினேன் என்பதை அவர் அவைக்குத் தெரிவிப்பதே இல்லை.

அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகிறார். ஜெய்சங்கருக்கு அனைத்து தகவல்களும் தெரியும் என்றாலும், பிரதமர் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்யக் கூடாது. ஜெய்சங்கர் பிரதமரானால், அவர் வாசிக்கலாம்.

வெளிவிவகாரத்துறை அமைச்சர், இலங்கைக்குச் சென்றார். லட்சக்கணக்கான தமிழர்களைக் கோரமான இனப்படுகொலை செய்தவர் கைகளில் பூங்கொத்து கொடுக்கச் சென்றீர்களா?

அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். எங்கள் குழந்தைகளும் தப்பவில்லை. சிங்களவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் நான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் தமிழர் வாழும் தெருக்களில் சுற்றி வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் 19 தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள். ஈழத்தமிழ் இனப்படுகொலையால், கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில் வேதனைத் தீயும், கோபத் தீயும் பற்றி எரிகின்றது. அப்படி எரிகின்ற நெருப்பில், நீங்கள் இப்போது பெட்ரோலை ஊற்றி இருக்கின்றீர்கள் என்று வைகோ கோபமாகப் பேசினார். 

இதற்கு விளக்கம் அளித்துப் பேசிய ஜெய்சங்கர், ‘நான் மொத்த இலங்கைக்கும்தான் அதிபர் என்று கோத்தபய கூறி இருக்கின்றார். அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருதித்தான் நாங்கள் செயல்படுவோம். நான் அவருக்கு அழைப்பு கொடுத்தேன்’’ என வைகோவுக்குப் பதில் அளித்தார்.

இலங்கை மேட்டருன்னா வைகோவுக்கு குஷிதான்.