பிரமாண்ட திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடற்சிங்கம்! பிறகு நடந்த அதிசயம்! நடுக்கடல் சம்பவம்!

கலிஃபோர்னியா: திமிங்கலத்தின் வாயில் சிக்கி மயிரிழையில் கடற்சிங்கம் ஒன்று உயிர்பிழைத்துள்ளது.


திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கிய எதுவும் உயிர் பிழைக்க முடியாது, என ஒரு பழமொழி உண்டு. ஆனால், அப்படிப்பட்ட திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடற்சிங்கம் உயிருடன் தப்பித்த நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மான்டிரி பே பகுதியில் சேஸ் டெக்கர் என்பவர் கடல்வாழ் உயிரினங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் சென்ற படகிற்கு வெகு அருகில் திமிங்கலம் ஒன்று தனது வாயை பிளந்து, இரைகளை விழுங்கியுள்ளது. அதில்  ஏராளமான மீன்கள் இருந்ததோடு, கடற்சிங்கம் ஒன்றும் சிக்கியுள்ளது.

அவற்றை எல்லாம் திமிங்கலம் விழுங்க முயற்சித்த நிலையில், மயிரிழையில் கடற்சிங்கம் அப்படியே தப்பி மீண்டும் உயிருடன் கடலில் குதித்துள்ளது. இதை, சேஸ் டெக்கர் தனது கேமிராவில் கவனமாகப் புகைப்படம் எடுத்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் நிகழ்ந்த அதிசய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. திமிங்கலம், கடற்சிங்கம் என இரண்டுமே காயம் அடையாமல் தப்பிய இந்த நிகழ்வு வியப்பை ஏற்படுத்துவதாகவும், தனக்கு கிடைத்த மிக அரிய வாய்ப்பு எனவும், இதுபற்றி இன்ஸ்டாகிராமில் சேஸ் டெக்கர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.