என்னாது பிரசாரத்துக்கு பா.ஜ.க. வர்றாங்களா? டென்ஷனில் சி.வி.சண்முகம், தங்கமணி! ஏன் தெரியுமா?

நாங்குநேரி தொகுதியை தி.மு.க. கேட்டு டென்ஷனைக் கிளப்பியது போலவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. கேட்டது. ஆனால், அதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளாமல் நாங்குநேரி தொகுதிக்கு வேட்பாளரை அ.தி.மு.க. நியமனம் செய்தது.


விக்கிரவாணியை ஜெயித்துத்தருவது என் பொறுப்பு என்று சி.வி.சண்முகம் உறுதி எடுத்துக்கொள்ள, நாங்குநேரியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தங்கமணி களத்தில் இறங்கிவிட்டார். இருவரும் வோட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக தகவல்.

விஜயகாந்த், ராமதாஸ் கட்சிகளிடம் மட்டும் ஆதரவு பெற்று, அவர்களுடைய பிரசாரம் மட்டும் வெற்றிக்குப் போதும் என்று சி.வி.சண்முகமும் தங்கமணியும் நினைத்தார்கள். ஆனால், விதி வலியது. பிரதமர் வருகையின்போது வேறு வழியில்லாமல் ஆதரவு கேட்கும் சூழல் உருவானது.

முரளிதரராவை சந்தித்துப் பேசவும் என்று மோடி சொல்லிவிட்டதால் இரட்டையர்களும் அவரிடம் பேசினார்கள். அவர் கை காட்டவே பியூஸ் கோயலிடம் பேசினார்கள். அதைத் தொடர்ந்துதான் ஆதரவு உறுதியாகியுள்ளது.

ஆனாலும், அ.தி.மு.க.வினர் நேரில் வந்து ஆதரவு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. கறார் கட்டளை போட்டதாம். அதனால் வேறு வழியின்றி ஜெயக்குமார் இன்று பா.ஜ.க. அலுவலகம் போய் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கேட்டார். அவரும் ஆதரவு தருவதாக சொல்லிவிட்டாராம்.

இந்தத் தகவல் தெரிந்துதான் சண்முகமும், தங்கமணியும் டென்ஷன் ஆகிறார்கள். பா.ஜ.க.வினர் எட்டிப் பார்க்காத காரணத்தால்தான் வேலூரில் வெற்றிக்குப் பக்கத்தில் வந்தோம், இப்போ அதுவும் போச்சா என்று தலையில் கை வைக்கிறார்கள்.

ஜெயக்குமார் தேடிப் போய் சிக்கலை விலைக்கு வாங்கியிருக்காரே!