வெண்டிலேட்டர், டெஸ்ட் கிட்டில் காசு பார்க்க கமிசன் பேரம்! வாழும் போதி தர்மரை எடப்பாடியார் ஒதுக்கியதன் பரபர பின்னணி!

கடந்த பல நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் மீடியாக்களில் பட்டைய கிளப்பி வந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவார்.


சமூக வலைத்தளங்களில் கடந்த 20 நாட்களாக இவரைப் பற்றிய செய்திகளே அதிகம் வலம் வந்துகொண்டிருந்தன. வாழும் போதிதர்மர் என்றெல்லாம் இவருக்கு சமூக வலைத்தளத்தில் பெயர்கள் வைக்கப்பட்டது. சீனியர் அமைச்சர்கள் சிலர் தமிழக அரசின் திட்டங்களை பிரபலப்படுத்துவதற்கு பதிலாக இவர் தன்னை முன்வைத்துக் கொள்கிறார் என்று முதலமைச்சரிடம் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். 

இதனால் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களிடம் இருந்து சில தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளப்பட்டன.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை அழைத்துப் பேசிய முதல்வர் தரப்பினர் இனிமேல் கொரோனா வைரஸ் பிரச்சினை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பை சுகாதாரத்துறை செயலாளர் நடத்திக் கொள்ளட்டும் . நீங்கள் அவர்களுக்கு மேற்பார்வை மட்டும் செய்தால் போதுமானது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கமிஷன் பிரச்சனையால் உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக கவசம் ,டெஸ்ட் கிட், வென்டிலேட்டர் ஆகியவற்றை கொள்முதல் செய்வதில் விஜயபாஸ்கருக்கும் , தமிழக மருத்துவ சேவை நிர்வாக இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் விஜயபாஸ்கர் தனது உதவியாளர் மூலம் 30 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் கேட்டதால் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் மூலமாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரம் கட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வென்டிலேட்டர் டெஸ்ட் கிட் மற்றும் முககவசம் ஆகியவற்றை ஆடர் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது இன்னும் கொள்முதல் செய்யப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.