தேர்தலுக்கு பிறகு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 2000! எடப்பாடியின் அதிரடி புதிய அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அனைத்து குடும்பத்தினருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை மக்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை தமது அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். ஆனால் ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக திமுக சதித்திட்டம் தீட்டியதாக எடப்பாடி குற்றம்சாட்டினார்.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் 2000 ரூபாய் கொடுக்க முடியாத சூழல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால் யாருக்கு 2000 ரூபாய் கொடுக்கவேண்டும் என்கிற கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனவே தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் நிச்சயம் தமிழக அரசால் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். சுமார் 70 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்கள் குடும்ப அட்டையின் படி தலா இரண்டாயிரம் ரூபாய் நிச்சயமாக கொடுக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.