தஞ்சையில் தனித்துப் போட்டி! திமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி! காரணம் மாசெ துரை சந்திரசேகரன்!

தஞ்சை மாவட்டத்தின் தி.மு.க மாவட்டச் செயலாளர் மற்றும் திருவையாறு தொகுதி எம்.எல்.ஏவுமான துரை.சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை மதிக்காததால் உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம் கட்சி ஆனது திமுகவினர் உடன் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடப்போவதாக சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் திமுக கட்சியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. இதேபோல் இந்த மாத இறுதியில் நடைபெறப்போகும் உள்ளாட்சித் தேர்தலிலும் இவ்விரு கட்சியும் கூட்டணியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சிபிஎம் கட்சி தாங்கள் தனித்து தஞ்சை மாவட்டத்தில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளனர்.

எதற்காக தனித்துப் போட்டி இடுகிறீர்கள் என்று சிபிஎம் கட்சியினரிடம் கேட்ட பொழுது, கலைஞர் கருணாநிதியும் ஸ்டாலினும் கூட்டணி தர்மத்தை எப்போதும் மதித்து நடக்கக் கூடியவர்கள் ஆவர். ஆனால் தற்போது திமுகவின் மாவட்ட அணி செயலாளராக இருக்கும் துரை சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை மீறி நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. 

முதலில் சிபிஎம் கட்சியினர் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலில் ஒரு உறுப்பினர் வீதம் ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு துரை சந்திரசேகர் தர முடியாது என்று மறுத்து விட்டாராம். பின்னர் குறைந்தது 10 இடங்களில் தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு சிபிஎம் கட்சியினர் மீண்டும் கேட்டுள்ளனர் . அதுவும் எங்களால் தர இயலாது என்று துரை சந்திரசேகர் கராராக கூறிவிட்டாராம். இதனையடுத்து 5 இடங்களை யாவது எங்களுக்கு ஏற்றார் போல் அவர் ஒதுக்கி தருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் கடைசியில் அதிலும் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என்று சிபிஎம் கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.

பூதலூர் ஒன்றியத்தில் சிபிஎம் கட்சிக்கு நிறைந்த செல்வாக்கு உள்ளது. ஒருவேளை சிபிஎம் கட்சியினர் திமுகவுடன் கூட்டணி வைத்தால் திமுகவின் செல்லக்கண்ணு தான் அந்த இடத்தின் தலைவராக வெற்றி பெறுவார். ஆனால் செல்லக்கண்ணுவை துரை சந்திரசேகருக்கு பிடிக்காதாம். அதனால் தான் தாங்கள் கேட்ட இடத்தை சந்திரசேகர் அவர்கள் சிபிஎம் கட்சிக்கு தர மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது. 

இதனால் தான் கூட்டணி தர்மத்தை துரை சந்திரசேகரன் மதிக்கவில்லை என்று கூறி சிபிஎம் கட்சியினர் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடம் கிடையாது என்று கூறி தனித்துப் போட்டியிட துணிந்து உள்ளனர். இதைப்பற்றி துரை சந்திரசேகர் தரப்பினரிடம் கேட்டபொழுது தாம் கூட்டணி தர்மத்துடன் தான் நடந்து கொள்வதாகவும் மேலும் எல்லாருக்கும் சமமாக தான் இடங்கள் ஒதுக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.